Local

நாட்டின் அரசியல் நிலை முற்றிலும் சீர்குலைவு! மைத்திரி, மஹிந்த, ரணில் இணைந்து பேச வேண்டும்!!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கான அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா அதன் ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா, அதன் தலைவர் என்.எம். அமீன் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

“இலங்கைக்கு பெருமைக்குரிய ஒரு ஜனநாயக வரலாறு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசியலமைப்பு தடைப்பட்ட எந்த சந்தர்ப்பமும் இல்லை. இலங்கையர்கள் என்ற வகையில், ஒரு நிலையான நாட்டைநோக்கிச் செல்வதற்கு நாம் ஜனநாயக விழுமியங்களை மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும்”. என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு வசதிகளை ஏற்படுத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் சுயநல சக்திகளில் சிக்கி வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading