Lead NewsLocal

மஹிந்த அணிக்கு நெத்தியடி! அமைச்சரவை மீதான தடையை நீக்க மறுத்தது உயர்நீதிமன்றம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த இடைக்காலத் தடை உத்தரவு இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ – அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிநிலைப் பணிகளை ஆற்றுவதற்குத் தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று காலை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

முதலில் இந்த மேன்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் குழாமே விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், அவரது சட்டத்தணிகளால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனு பரிசீலிக்கப்பட்டு அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகார, விஜித மழலகொட ஆகியோரைக் கொண்ட மூன்று நீதியரசர்கள் குழாமே இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நீதியரசர் ஈவா வணசுந்தர, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த மனுவை, நீதியரசர் ஈவா வணசுந்தர விசாரிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதியரசர் ஈவா வணசுந்தர இன்றுடன் ஓய்வுபெறும் அறிவிப்பை நீதியரசர் புவனேக அலுவிகார வெளியிட்டார். அவர் விசாரித்து தீர்ப்பளிக்கும் கடைசி மனு இதுவே என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, இன்று காலை தொடக்கம் மாலை வரை மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் முடிவில் இன்று மாலை தமது தீர்ப்பை மூன்று நீதியரசர்கள் குழாமும் அறிவித்தது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மூன்று நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்தனர்.

குறித்த மனுவை பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தின்படி விசாரிப்பதற்கு அனுமதி வழங்கிய மூன்று நீதியரசர்களும், அதனை எதிர்வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசாரிக்க உத்தரவிட்டனர். மேன்முறையீடு தொடர்பில் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

அத்துடன், உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கை இடைநிறுத்துவதற்கும் அவர்கள் உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading