Local

முனசிங்கவின் தீர்வுத் திட்டத்தைக் கூட்டணி ஆதரித்திருந்தால் புது வரலாறு பிறந்திருக்கும்! – சபையில் கூறினார் ரணில்

மங்கள முனசிங்கவின் தீர்வுத்திட்ட அறிக்கைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று ஆதரவு தெரிவித்திருந்தால் இலங்கையில் புதியதொரு வரலாறு பிறந்திருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கவேண்டும் என்றும், நிபுணர்கள் குழுவின் புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் எம்.பி. அமரர் மங்கள முனசிங்கவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் தலைவராக எதிரணி உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தீர்மானித்திருந்தார். இதன்படி மங்கள முனசிங்கவுக்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு எப்படியாவது தீர்வை கண்டுவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இதன்படி அவர் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகப் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. நானும் சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தேன். பிரதமரான பின்னர் அதில் பங்கேற்கவில்லை. எனினும், முதல் தடவையாக இரு பிரதான கட்சிகளும் தீர்வுத் திட்டத்துக்கு இணக்கம் வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்க் கட்சிகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ( ரி.யூ.எல்.எவ்) இணக்கம் வெளியிட்டிருந்தால் இலங்கையில் புதியதொரு வரலாறு பிறந்திருக்கும்.
மங்கள முனசிங்க குறித்தும் அவரின் அறிக்கை தொடர்பிலும் இன்றும் பேசப்படுகின்றது. எனவே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றார் பிரதமர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading