Jobs

அகில இலங்கை பாடசாலைச் சுற்றுலா ஒன்றியத்தின் இறுதிப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட அகில இலங்கை சுற்றுலா ஒன்றிய போட்டித் தொடரின் இறுதிப் போட்டி பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டல் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டித் தொடரில் 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சமையல், உணவு பரிமாறல், வீட்டுப் பராமரிப்பு மற்றும் இதர பிரிவுகளின் கீழ் அறிவு மற்றும் ஆற்றல்களை பிரதிபலிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாகாண மட்ட போட்டிகள் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் நடைபெற்றன. SLITHM யாழ்ப்பாணம் (வட மாகாணம்), SLITHM குருணாகல் (வட மேல் மாகாணம்), SLITHM இரத்தினபுரி (சப்பிரகமுவ மாகாணம்), SLITHM பண்டாரவளை (ஊவா மாகாணம்), மிந்தத ஹோட்டல் – அம்பாறை (கிழக்கு மாகாணம்), SLITHM கண்டி (மத்திய மாகாணம்), SLITHM கொக்கலை (தென் மாகாணம்), SLITHM கொழும்பு (மேல் மாகாணம்) மற்றும் .SLITHM அனுராதபுரம் (வட மத்திய மாகாணம்) அவற்றில் அடங்கும். ஒரு போட்டியில் வெற்றியாளர்களை தெரிவு செய்வதை தாண்டி ஆரவங் கொண்டுள்ள மாணவர்களை சுற்றுலாத் துறை மற்றும் விருந்தோம்பல் துறைக்கு உள்ளீர்ப்பதை நோக்கமாக கொண்டு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கிராமப் பகுதிகளிலும் பாடசாலைகளிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை தொடர்பில் குறைந்தளவிலான கவனமே செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் அது தொடர்பாக மக்களிடமுள்ள புரிதலை அதிகரிப்பதோடு திறமைகளுடன் கூடிய மாணவர்களை அடையாளங் காண்பதற்கும் வாய்ப்பு கிடைக்குமென அவர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்புடன் வலுவானதொரு மனித வள மூலதனத்தின் அவசியத்தை வெளிப்படுத்துவது இந்த போட்டிகளின் மேலுமொரு நோக்கமாகும்.

இங்கு உரையாற்றிய சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவப் பட்டதாரிகளின் சங்கத்தின் தலைவர் நிஹால் முஹந்திரம் கருத்து தெரிவிக்கையில், கிராமிய இளம் தலைமுறையினருக்கு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு பிரவேசித்து தமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு பல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். “கிராமிய பிரதேசமொன்றிலிருந்து வந்தவன் என்ற வகையில் எனக்கும் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பாடசாலைக் காலத்தில் எனக்கும் மருத்துவர் அல்லது பொறியிலாளராக வேண்டுமென்பதே ஆசையாக இருந்தது. ஆனால், சுற்றுலாத் துறைக்கு பிரவேசித்ததன் மூலம் எனது வாழ்க்கையே மாறியது. சுற்றுலாத்துறை தேசிய பொருளாதாரத்தில் 10% பங்களிப்பை வழங்குகிறது. இத் துறையில் பல வாய்ப்புகள் உள்ளன. இந்த போட்டிக்கு மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி. உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற தவறினாலோ பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போனாலோ தமது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக சிலர் நினைக்கிறார்கள். அந்த எண்ணம் மாற வேண்டும். சகல பிள்ளைகளுக்கும் சம வாய்ப்பு உருவாக்கப்படுதல் வேண்டும். இத் திட்டம் அதற்கான ஒரு முயற்சியாகும்” என அவர் தெரிவித்தார். SLITHM மற்றும் SLCB தலைவர் தீர ஹெட்டிஆரச்சியும் இங்கு கருத்து தெரிவித்தார். “இது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிதொரு பிரமாண்ட வேலைத்திட்டம். இது இலகுவான காரியம் கிடையாது. இன்றளவில் சுற்றுலாத்துறை சகல துறைகளுடன் வேகமாக முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வரும் சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதற்கு ஆற்றல்கள் நிறைந்த மனித வளமொன்று தேவை. இன்றளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சுற்றுலாத்துறைக்குரிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. SLITHM நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு ஆற்றல்மிகு தொழில் வல்லுநர்களாக சுற்றுலாத் துறைக்கு பிரவேசிப்பதற்கு தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எமது நிறுவனத்திடம் கற்கும் 100 வீத மாணவர்களும் வெளியில் போகும் போது தொழிலுடனேயே செல்கிறார்கள். சுற்றுலாத் துறையின் மூலம் சர்வதேச மட்டத்திலான தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இத் துறையை பயன்படு்த்தி நாட்டுக்குள் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது பொறுப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இப் போட்டித் தொடர் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) “சுற்றுலாத் துறை மற்றும் நிலைப்பேறான மாற்றம்” தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமமான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அண்மைய உலகச் சுற்றுலாத் தின நிகழ்வுகளில் பரந்துபட்ட நிகழ்வாக மாகாண மட்ட போட்டித் தொடர்களில் தொடங்கி சர்வதேச தரத்திலான கருத்தரங்குகள் வரையான பல்வேறு அம்சங்களை கொண்டதொரு நிகழ்வாக இம்முறை நிகழ்வை குறிப்பிட முடியும். சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), இலங்கை சுற்றுலா ஹோட்டல்களின் சங்கம் (THASL), மற்றும் இலங்கை உள்ளக சுற்றுலா இயக்குநர்களின் சங்கம் (SLAITO) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வுக்கு சுற்றுலா பொருளாதார மற்றும் விரும்தோம்பல் முகாமைத்துவப் பட்டதாரிகளின் சங்கமும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலைப்பேறான சற்றுலாப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading