World

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் பெலன் பதவி விலகல்

ட்ரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜோன் பெலன் தனது பதவியிலிருந்து விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷோன் பார்னெல் சமூக வலைதளப் பதிவொன்றில், இந்த பதவி விலகல் “உடனடியாக அமலுக்கு வரும்” வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெலனின் விலகலைத் தொடர்ந்து, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ பதில் செயலாளராகப் பணியாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய உயர்மட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக பெலன் இணைந்துள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, 2025 மார்ச் மாதம் கடற்படைச் செயலாளராகப் பதவியேற்றார்.

பெலனின் விலகலுக்கான குறிப்பிட்ட காரணம் எதனையும் கடற்படை இதுவரை வெளியிடவில்லை. எனினும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் சமீபத்தில் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைப் பதவிகளிலிருந்து நீக்கியிருந்தார். பெலனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள ஹங் காவோ, 25 வருட அனுபவமிக்க ஒரு கடற்படை நிபுணராவார். விடைபெறும் பெலன் ஆற்றிய சேவைக்காக பென்டகன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே நிலவும் கடும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ்  நீரிணை முடக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறுவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் கூறியுள்ளார். உலக எண்ணெய் விநியோகத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் இந்த நீரிணையில் இரண்டு கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading