அமெரிக்க வரலாற்றில் முதன்முறை; நாணயத்தாள்களில் டிரம்பின் கையெழுத்து!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயத்தாள்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனூடாக அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, பதிவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரின் கையெழுத்து அமெரிக்க நாணயத்தாள்களில் பதிவுசெய்யப்படவுள்ளது.

பொருளாளரின் கையெழுத்துக்குப் பதிலாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் கையெழுத்து
1861 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாணயத்தாள்களில் திறைசேரி செயலாளருடன் இணைந்து அமெரிக்கப் பொருளாளர் கையெழுத்திடும் பாரம்பரியமே நடைமுறையில் இருந்தது.
தற்போது அந்தப் பாரம்பரியம் மாற்றப்பட்டு, பொருளாளரின் கையெழுத்துக்குப் பதிலாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் கையெழுத்து பதிவுசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி அமெரிக்கா தனது 250 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை முன்னிட்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது பெயரை அரச நிறுவனங்களுடன் இணைக்கும் தொடர் நடவடிக்கைகளில் இது மற்றுமொரு கட்டமாகும்.
வொஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ‘ஜோன் எஃப் கென்னடி’ கலை மையம், ‘ட்ரம்ப்-கென்னடி’ மையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தினால் அதிருப்தியடைந்த பல கலைஞர்கள் தமது நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளனர்.
இதனால் புனரமைப்புப் பணிகளுக்காக இந்த மையம் ஜூலை மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்படவுள்ளது. “எமது நாட்டின் 250 ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகளையும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பங்களிப்பையும் கௌரவிக்க இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை” எனத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.