World

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதன் முதலாக தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த கொலைகார வைரஸ் தொற்று, உலகளாவிய தொற்று நோய் என மார்ச் மாதம் 11 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கர்ப்பங்களால் உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன. வரும் 10 ஆம் திகதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாட உள்ள நிலையில், உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என்பது அதிர்வினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11 ஆம் திகதிக்கு பின்னர் 9 மாதங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும், அதாவது, மார்ச் 11 ஆட் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் திகதி வரையில் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் கணித்துள்ளது. இதே போன்று கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் 1 கோடியே 35 லட்சம் குழந்தைகள் பிறக்கும்.

நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யுனிசெப் கூறி உள்ளது. எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கையில் 6-வது இடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் 32 லட்சம் குழந்தைகள் பிறக்கும்.

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்புவீதம் அதிக அளவில் இருந்ததாகவும், இது கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் யுனிசெப் எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading