World

இன்று இரவு முதல் டெல்லி Lockdown!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டி விட்டது. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக டெல்லி அரசு அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் வரும் 26 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading