Sports

இறுதிப் போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல் செல்லாது மீண்டும் போட்டியை நடத்த கோரிக்கை!

பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தீவிரமான கையெழுத்து வேட்டையை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

இறுதிப் போட்டி சர்ச்சைகள்

3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.

போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன.

ஓன்லைன் மனுக்களை ஒருங்கிணைக்கும் மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆன்லைன் மனுவில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவோரின் முதலாவதாகக் கூறும் காரணம், அர்ஜென்டினாவுக்கு முதல் பெனால்ட்டி வாய்ப்பை வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான்.

டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே அர்ஜென்டினா வீரர் டி மரியா மீது மோதி பந்தைக் கடத்தவிடாமல் செய்ததாக அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார்.

இதுவே அர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தருணத்திலேயே அர்ஜென்டினா ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்தாலும், பிரான்ஸ் ரசிகர்கள் அதை பெனால்ட்டியாக ஏற்கவில்லை.

இதற்காக ஆதாரமாக டி மரியாவைத் தொடும் காட்சிகளையும் பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். டி மரியா தாமாகவே கீழே விழுந்ததாக பலர் பதிவிட்டார்கள். தமது மற்றொரு கால் தடுக்கியதாலேயே அவர் விழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.l

அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம்

இந்த பெனால்ட்டியை வழங்குவதற்கு கள நடுவர், காணொளி உதவியை நாடவில்லை என்பதையும் பிரான்ஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். ஆனால் டெம்பாலே மெதுவாகத் தொட்டாலும், அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த விவாதம்தான் இப்போது ஆன்லைன் மனுவாக உருவெடுத்திருக்கிறது.

இறுதிப் போட்டியின் 36-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலை டி மரியா அடித்தார். அர்ஜென்டினாவின் கோல் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட பந்தை நெடுந் தொலைவு ஓடி வந்து கோலுக்குள் அடித்தார் மரியா.

ஆனால் பந்தைக் கடத்திவரும்போது எம்பாப்பேவை தடுத்து ரொமேரோ ஃபவுல் செய்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் டி மரியா அடித்த இரண்டாவது கோலையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஓன்லைன் மனுக்களால் மறு போட்டி நடக்குமா?

சமூக வலைத்தள விவாதங்கள், ஆன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிபா எடுத்ததில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading