Local

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசாங்கம் காரணமில்லையாம்!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார  நெருக்கடிக்கு தற்போதைய அரசோ  கொரோனா  தொற்றோ காரணமில்லை. 1955ஆம் ஆண்டில் இருந்து  நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்துக் கட்சிகளுமே இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பென தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில,  பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுவதும் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை அசைத்துக்கொண்டேயாகும் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில்   சனிக்கிழமை  இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம்  நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு  தெரிவித்த அவர்   மேலும் கூறுகையில்,

நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது.
நாட்டில் ரூபா இல்லை. டொலர் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றோம். அவ்வாறு இல்லாமல் நாட்டில் அவ்வாறான  பிரச்சினை இல்லை. தேவையான அளவு பணம் இருப்பதாக நாங்கள் தெரிவித்து வந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து எமக்கு வெளியில் வர முடியாது. அதனால்தான் கடந்த ஜூன்  மாத ஆரம்பத்திலேயே நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாக தெரிவித்தேன். 

1955ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் சமர்ப்பித்த அனைத்து வரவு செலவுத் திட்டங்களும்  பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களே. எமது வருமானத்தையும் பார்க்க செலவு அதிகம். அதனால் பற்றாக்குறையை நிரப்பிக்கொள்ள கடன் பெற்றோம். அவ்வாறு பெற்ற கடன்தான் இப்போது பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இந்தப் பிரச்சினைக்கு 1955இல் இருந்து ஆட்சி செய்த அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். 

எமது அனைத்து தேவைகளுக்கும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையே உள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுவதும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை அசைத்துக்கொண்டாகும். அதனால் வெளிநாட்டு செலாவணி குறைவது என்பது வியப்பானது அல்ல. கொரோனா  காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்படவில்லை. 2019இல் எமது பொருளாதார அபிவிருத்தி வேகம் 2 வீதத்துக்குக் குறைந்துள்ளது.
கடன் வீதம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதுதான் பொருளாதார வீழ்ச்சிக்கான அடையாளம். இந்தப் பிரச்சினை எப்போதாவது வெடிக்கவே இருந்தது. என்றாலும் கொரோனா காரணமாக விரைவாக வெடித்திருக்கின்றது.

2019ஆம் ஆண்டு  இறக்குமதி செலவு மற்றும் ஏற்றுமதி வருமானங்களுக்கு இடையில் வித்தியாசம்  8  பில்லியன் டொலர். கடன் தவணை மற்றும் வட்டியைச் சேர்த்தால் 13 பில்லியன் டொலர்.   சுற்றுலாத் துறை, வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் டொலர்கள் மற்றும் முதலீட்டாளர் இந்த நாட்டுக்குக் கொண்டுவந்த டொலர்கள் ஊடாகவும் ஏனையவற்றை கடனுக்கு பெற்றுக்கொண்டாகும். கொரோனா  தொற்று ஏற்பட்டதனால் இந்த வருமான வழிகள் தடைப்பட்டன.  அதனால் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டும்.

நாட்டில் இவ்வாறு தேசிய பிரச்சினை இருக்கும்போது நாங்கள் அதற்கு இணைந்து முகம் கொடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் கட்சி, இன, மத ரீதியாக பிரிந்து இருப்பது மாத்திரமல்லாது கொரோனாப்  பிரச்சினைக்கு முகம்கொடுத்து நாட்டை பாதுகாப்பது அனைத்துக் கட்சிகள், இனத்தவர்களின் பொறுப்பு.
பாதிக்கப்பட்டிருப்பது எம்மனைவரதும் நாடாகும். எமது நாடு அழிந்தால் நாங்கள் அனைவரும் அழிந்து விடுவோம். அதனால் தொற்று நிலைமையில் தங்களது அரசியலை கட்டியெழுப்புவதைவிட தொற்று நிலைமையில் இருந்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்றே சிந்திக்க வேண்டும்.

கொரோனாவைப்  பயன்படுத்தி அனைவரும் இணைந்து அரசாங்கத்தை தோற்கடிப்பதற்குப் பதிலாக அனைவரும் இணைந்து கொரோனாவை தோற்கடிப்பதற்கு இணைந்து செயற்படவேண்டும். என்றாலும் எதிர்க்கட்சி கொவிட் நிலையையும் பொருட்படுத்தாது, கொரோனா  4ஆவது அலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவது கவலைக்குரியது என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading