Lead News

இலங்கையை மீட்டெடுக்கும் அரசின் முயற்சிக்கு சர்வதேசம் ஆதரவு

தித்வா சூறாவளி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையை அழிவுகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் டுபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் இதுவரை நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளன.சர்வதேச மனிதாபிமான நட்பினூடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்திற்காக ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இலங்கை மீள்வதற்காக பிரிட்டனும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த நாடு எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்கன் டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.அதேவேளை,சீன அரசாங்கமும் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. குறித்த நிதியை சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றும் ஒரு உதவி நிவாரணத் தொகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேரடியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.இது தொடர்பில் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி, இந்த கடினமான காலப்பகுதியில் ரஷ்யாவின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்துக்கு பின்னர்,அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான விசேட தூதுவரும்,வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.இது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளது.

அதில், “விசேட தூதுவர் செர்ஜியோ கோர் நேற்றுக் காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் உரையாடினார்.நூற்றுக்கணக்கானோரை காவுகொண்ட மற்றும் இலட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த தித்வா சூறாவளியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன்,அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாவைத் திரட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading