Local

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய அவுஸ்திரேலியா எம்.பி.

ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட, ஆஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இனப்படுகொலையை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்சேவின் சிங்கள அரசுக்கு தண்டனை பெற்றுத் தர பல வழிகளிலும் பலரும் போராட்டக் குரல்களை உயர்த்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த மே-18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட, ஆஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகவும், இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் செயலுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்று தரும் வரை, தொடர்ந்து தனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நினைவேந்தல் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், `இலங்கையில் தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையில், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட அனைவருமே மொழி, கலாசாரம், மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் மரபுகள் அடிப்படையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும். இலங்கை அரசால் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வழிவகை செய்ய வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் நீதியை வேண்டி நிற்கும் இலங்கைத் தமிழர்களுக்குத் தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் அனைத்து விதமான போராட்டங்களிலும் உடனிருப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஹக் மெக்டெர்மொட்டின் இந்தக் கருத்துக்கு, ஆஸ்திரேலிய வாழ் சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர். மேலும், உலக நாடுகளில் வசிக்கும் சிங்களவர்களை ஒன்றிணைத்து, அவருக்கு எதிராக இணைய வழி கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றனர். மேலும், ஹக் மெக்டெர்மொட்டின் கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஏற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், கையெழுத்து இயக்கத்தில் சுமார் 10,000 சிங்களவர்கள் கையெழுத்திட்டுள்ளதாகச் கூறப்படுகிறது

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த ஹக் மெக்டெர்மொட்டை ஆதரித்தும், சிங்களவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒரு கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹக் மெக்டெர்மொட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதோடு, அவருக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading