Local

இலங்கை மாணவர்களுக்கு ஹங்கேரியாவின் Stipendium Hangaricum புலமைப்பரிசில்

ஹங்கேரியாவின் Stipendium Hangaricum புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதன் மூலம் இருநாடுகளுக்கிடையே உயர்கல்வி துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2022-2024 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியான இவ் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மாணவர்களுக்கு முதலாவது பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்புக்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

ஒப்பந்தத்தின் மூலம் நேரடி நன்மைகளாக இலங்கை மாணவர்களுக்கு விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் 08 முதலாவது பட்டப்படிப்பு வாய்ப்புக்களும், 08 பட்டப்பின்படிப்பு வாய்ப்புக்களும், 04 கலாநிதிப் பட்டப்படிப்பு வாய்ப்புக்கள் உள்ளிட்ட மொத்தமாக 20 Stipendium Hangaricum புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் ஆண்டுதோறும் கிடைக்கின்றன.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஹங்கேரியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சுடன் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading