இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி மகளைப் போல் நடித்து பண மோசடி செய்த தாய்!

பெண்ணொருவர் அவரது மகளைப் போல் நடித்து, இளைஞர்கள் பலரை தனது காதல் வலையில் வீழ்த்தி, பணமோசடி செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி பகுதியில் வசித்து வந்த லாராத ஒக்லெஸ்பி (Laura Oglesby) என்ற 45 வயதான பெண்ணே இரண்டு வருடங்களாக இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது மகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன் , தனக்கு 22 வயதுதான் ஆகிறது எனக் கூறி பலரையும் நம்ப வைத்துள்ளதாகவும்,அத்துடன் தான் ஒரு கல்லூரி மாணவி எனக் கூறி இலங்கை மதிப்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெற்றுக்கொண்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் தனது மகளின் புகைப்படத்தை பயன்படுத்தி இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணத்தையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கல்விக்கடன் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதே லாரா ஒக்லெஸ்பி ஏமாற்றியமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, லாராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மகளைப் போல் நடித்து ஏமாற்றிய குற்றத்திற்காக மகளுக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
