ஈராக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
ஈராக்கின் வடக்கு Nineveh மாகாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவிலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
திருமண நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட வான வேடிக்கைகள் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஈராக்கின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிகழ்வு மண்டபத்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட எரியக்கூடிய பொருட்கள் மிகப்பாரியளவில் தீ பரவுவதற்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சுமார் ஆயிரம் பேர் மண்டபத்தினுள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தீ விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
