ஈரான் ஏன் அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும்?
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது என்பது வெறும் மிரட்டல் அல்ல , அல்லது ராணுவ ஆதிக்கத்திற்கான காரணியும் அல்ல.
அணுஆயுதம் ஒன்றை வைத்திருப்பது அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்விற்கான ஒரு கட்டாயத் தேவை .
கடந்த பல தசாப்தங்களாக ஈரான் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களையும், சைபர் தாக்குதல்களையும் நடத்தியுள்ளன.
இது தவிர, ஈரானின் முன்னணி அணுசக்தி விஞ்ஞானிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச ஒப்பந்தங்கள் பலமுறை ஈரானால் மதிக்கப்பட்ட போதும், வல்லரசு நாடுகள் அந்த ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டன.
இத்தகைய சூழலில், தன் பாதுகாப்பை உறுதி செய்ய அணு ஆயுதம் மட்டுமே ஒரே வழி என்ற நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது.
உலக வரலாறு உணர்த்தும் பாடம் என்னவென்றால், அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எப்போதும் பிற நாடுகளால் மதிக்கப்படுகின்றன அல்லது அச்சத்துடன் பார்க்கப்படுகின்றன என்பதே யதார்த்தம்.
சீனா 1964-இல் அணு குண்டை சோதிக்கும் வரை அமெரிக்கா அதை ஒரு பெரிய சக்தியாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், அணு ஆயுதத்திற்குப் பிறகு அமெரிக்கா சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதங்களை உருவாக்கியது. அதன் விளைவாக, இன்று வரை எந்த ஒரு நாடும் வடகொரியா மீது நேரடிப் படையெடுப்பை நடத்த துணியவில்லை.
மத்திய கிழக்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 90-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை இஸ்ரேல் வைத்துள்ளது. அதன் மீது சர்வதேச சமூகம் எந்த ஒரு பெரிய பொருளாதாரத் தடைகளையும் விதிப்பதில்லை.
அணு ஆயுத திட்டங்களை கைவிட்ட நாடுகள் பிற்காலத்தில் எப்படிப்பட்ட பேரழிவைச் சந்தித்தன என்பதையும் ஈரான் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
லிபியாவின் அதிபர் முஅம்மர் கடாபி, மேற்கத்திய நாடுகளின் வாக்குறுதிகளை நம்பி தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே, அதே மேற்கத்திய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தின. இறுதியில் கடாபி ஒரு சாக்கடையில் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990-களின் தொடக்கத்தில் உலகிலேயே மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கைக் கொண்டிருந்த நாடு உக்ரைன். ஆனால், பிற நாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தை நம்பி தன் அணு ஆயுதங்களை அது ஒப்படைத்தது. அதன் விளைவை இன்று உக்ரைன் ஒரு பெரும் போரின் மூலம் அனுபவித்து வருகிறது.
ஒரு நாடு அணு ஆயுதம் தயாரிப்பது என்பது பிற நாடுகள் மீது போர் தொடுப்பதற்காக மட்டுமல்ல; மாறாக, பிற நாடுகள் தன் மீது போர் தொடுக்காமல் தடுப்பதற்காகத்தான். இதற்கு சர்வதேச அரசியலில் ‘Deterrence’ (தடுப்பு ஆற்றல்) என்று பெயர்.
ஈரானைப் பொறுத்தவரை, அணு ஆயுதம் என்பது ஆக்கிரமிப்பிற்கான கருவி அல்ல, அது ஒரு கேடயம்.
வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தன் நாட்டின் இறையாண்மையையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஈரானுக்கு அணு ஆயுதப் பாதையைத் தவிர வேறு சிறந்த வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

You must be logged in to post a comment.