World

உலகின் அதிக வருவாய் ஈட்டும் பண்ணை!

உலகமெங்கும் நுகரப்படும் முக்கிய உணவுப்பொருள், பன்றி இறைச்சி. குறிப்பாக மத்திய ஐரோப்பாவிலும், சீனாவிலும் பன்றி இறைச்சியின் பயன்பாடு அதிகம். கி.மு 5000-க்கு முன்பே உணவுக்காக பன்றிகள் வளர்க்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இன்று வேளாண்மைத்துறையில் முக்கிய அங்கமாகி
விட்டது பன்றி வளர்ப்புத் தொழில். இப்படிப்பட்ட பன்றி வளர்ப்பிலும் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஜின் யிங்ளின்.

உலகின் நம்பர் ஒன் பணக்கார விவசாயி இவர்தான். பன்றி வளர்ப்பின் மூலம் உலகின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்தவரும் இவரே.
இவரது ‘முயூவன் ஃபுட்ஸ்டப்’ எனும் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய பன்றிப்பண்ணையாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பன்றி இறைச்சியைத்தான் சீனர்கள் விரும்பி உண்கின்றனர். இப்படியான நிறுவனத்தை உருவாக்கிய ஜின்னின் வாழ்க்கைக்கதை புதிதாக தொழில் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகமும், நம்பிக்கையையும் அளிக்கக்கூடியது.

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் வீற்றிருக்கும் ஹெக்ஸி எனும் கிராமத்தில் 1965-ம் வருடம் பிறந்தார் ஜின் யிங்ளின். அப்போது ஜின்னின் குடும்பம் மட்டுமல்லாமல், சீனாவே ஏழ்மையில் வாடிக்கொண்டிருந்தது. இன்று சீனா அடைந்திருக்கும் வளர்ச்சியில் ஒரு சிறு துளி கூட அப்போது இல்லை. அதனால் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் பணம் ஈட்டினால் மட்டுமே குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை.

பள்ளியில் படித்துக்கொண்டே, சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்து குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு உதவியாக இருந்தார் ஜின். 1980 களில் ஜின்னின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பன்றி வளர்ப்புத்தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர். இதைப் பார்த்த ஜின்னின் தந்தையும் 20 பன்றிக்குட்டிகளை வாங்கினார். இதற்காகதான் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவிட்டார். பன்றிகள் வளர்ந்துவிட்டால் முதலீட்டை சுலபமாக எடுத்துவிடலாம் என்று நம்பினார். மட்டுமல்ல, கடன் வாங்கி வீட்டுக்கு அருகில் சிறிய அளவில் ஒரு பன்றிப்பண்ணையை நிறுவினார்.

ஆனால், நடந்ததோ வேறு. ஆம்; பன்றிக்காய்ச்சலால் 19 பன்றிக்குட்டிகள் இறந்துவிட்டன; ஒன்றும் மட்டுமே பிழைத்தது. நிலைகுலைந்துபோனார் ஜின்னுடைய தந்தை. இந்த துயரச் சம்பவம் ஜின்னை வெகுவாகப் பாதித்தது. பன்றி வளர்ப் பவர்களுக்கு உதவுவதற்காகவும், நோய்மையினால் பன்றிகள் இறந்துபோவதைத் தடுப்பதற்காகவும், பன்றிகளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளவும் ஹெனான் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த பட்டப்படிப்பில் சேர்ந்தார் ஜின். அவரது கிராமத்திலிருந்து ஏதாவது ஒரு நோக்கத்துக்காக கால்நடை வளர்ப்புப் படிப்பில் சேர்ந்தது ஜின்னாகத்தான் இருக்க முடியும்.

படிப்பை முடித்தவுடன் ஜின்னுக்கு நான்யாங் உணவு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இந்நிறுவனத்தில் வேலை கிடைத்தால் ஆயுளுக்கும் கவலையில்லை. இங்கேதான் தனது வருங்கால மனைவியான யிங்கைச் சந்தித்தார் ஜின். கால்நடை அறிவியல் படித்தவர் யிங். மூன்று வருடங்களுக்குப் பிறகு தங்களின் வசதியான வேலையைத் துறந்துவிட்டு பிசினஸில் இறங்கினார்கள் ஜின்னும், யிங்கும். அதுவும் பன்றிப்பண்ணை பிசினஸ். சுற்றியிருந்தவர்கள் அவர்களைக் கேலி செய்தனர். ஒருவர் கூட இந்த பிசினஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டவில்லை.
 
எல்லாவற்றையும் மீறி பன்றி இறைச்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்பினார் ஜின். அத்துடன் தொண்ணூறுகளில் சீனாவும் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. மக்கள் தொகைப் பெருக்கம் உணவுத்தேவையை அதிகரித்தது. ஐரோப்பாவில் பன்றி இறைச்சிக்கு நல்ல மவுசு. பல ஃபாஸ்ட் புட் நிறுவனங்களுக்கும், பீட்சா கடைகளுக்கும் பன்றி இறைச்சி அத்தியாவசியத் தேவையாக இருந்தது. இதுபோக உலகளவில் பன்றி வளர்த்து, அதன் இறைச்சியை விநியோகிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பன்றிப்பண்ணை பிசினஸில் இறங்கினார் ஜின்.

1992 ம் வருடம் தனது மனைவியுடன் இணைந்து ஒரு பன்றிப்பண்ணையை ஆரம்பித்தார் ஜின். அவரது கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பண்ணையில் 22 பன்றிக்குட்டிகள் வளர்க்கப்பட்டன. ஆரம்பத்தில் ஜின்னும், யிங்கும் சேர்ந்து பன்றி வளர்ப்பு முதல் பிசினஸ் வரை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டனர்.
கால்நடை வளர்ப்பு குறித்த கல்வியறிவையும், உணவு நிறுவனத்தில் வேலை செய்தபோது கிடைத்த அனுபவங்களையும் பிசினஸில் இணைத்தனர். அத்துடன் தங்களைச்சுற்றி பன்றி வளர்ப்பு பிசினஸில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருந்தனர். பன்றிகள் வளர்ந்ததும் அதை இறைச்சிக்காக விற்காமல் இனப்பெருக்கத்தை அதிகரித்தனர்.

அதனால் அடுத்த இரண்டு வருடங்களில் ஜின்னின் பண்ணையில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்தது. பண்ணையின் பரப்பளவு விரிவாக்கப்பட்டது. பன்றிகளைக் கவனித்துக்கொள்ள ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இறைச்சிக்கடைகளுக்கு நேரடியாக பன்றிகள் சப்ளை செய்யப்பட்டன. 1997 ல் பன்றிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரித்தது. ஜின்னின் வளர்ச்சியைப் பாராட்டி ‘சீனாவின் அசாதாரணமான இளம் விவசாயி’ என்ற விருது தேடி வந்தது.  

2000-ல் பன்றிப்பண்ணைக்கு ‘முயூவன் ஃபார்மிங்’ என்று பெயரிட்டார் ஜின். இந்தப் பெயர் நாளடைவில் ‘முயூவன் ஃபுட்ஸ்டப்’பாக பரிணமித்தது. பன்றி வளர்ப்பு மட்டுமல்லாமல் பன்றி இறைச்சியையும் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது இந்நிறுவனம். 2007 லிருந்து ஹெனான் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் பேராசிரி யராகப் பணிபுரிந்துகொண்டே, பிசினஸை வளர்ச்சிப்பாதையில் செலுத்தினார் ஜின். 2010 ம் வருடம்  உலக வங்கியின் ஓர் அங்கமான ‘இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன்’ எனும் நிதி அமைப்பு ‘முயூவனை’ விரிவாக்க கடன் உதவி செய்தது.

பல ஏக்கரில் பண்ணையைப் பெரிதாக்கி, ஆப்பிரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்து வளர்த்தார் ஜின். 2013 ல் சீனாவுக்குள்ளேயே புதிய கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு கிளையில் 10 லட்சம் பன்றிகள் வரை வளர்க்கப்பட்டன. 2014 ல் பங்கு வெளியிடும் ஒரு நிறுவனமாக உயர்ந்தது ‘முயூவன்’. 2019 ல் சீனாவின் இரண்டாவது பெரிய பன்றி இறைச்சி உற்பத்தியாளர் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியது இந்நிறுவனம். அதே வருடம் சீனாவில் பன்றிக்காய்ச்சல் பரவியது. ஜின்னுக்குப் போட்டியாக இருந்த நிறுவனங்களில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 50 சதவீதம் அழிந்துவிட்டன.

அதனால் பன்றி இறைச்சியின் விலை 160 சதவீதம் அதிகரித்தது. ‘முயூவன் ஃபுட்ஸ்டப்’பின் பங்கு விலை 200 சதவீதம் உயர்ந்தது. முக்கியமாக இந்தப் பன்றிக்காய்ச்சலால் ஜின்னின் பண்ணையில் இருந்த பன்றிகளுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஜின்னின் கால்நடை வளர்ப்பு குறித்த படிப்புதான் பன்றிக் காயச்சலிலிருந்து ‘முயூவனைக்’ காப்பாற்றியது.

பன்றிகளை நோய் தாக்காமல் இருப்பதற்காக நவீனமான பயோ செக்யூரிட்டியுடன், அதீத சுகாதாரமும் ‘முயூவனி’ல் கடைப்பிடிக்கப்படுகின்றன. குட்டிகளுக்குத் தனியான இடம், வளர்ந்த பன்றிகள், ஆண்கள் – பெண்களுக்குத் தனியான இடம், பன்றிகளை இறைச்சிக்காக வெட்ட தனியான இடம், கர்ப்பமான பன்றிகளுக்குத் தனி இடம்… என பல தளங்களை அமைத்து பன்றிகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறார் ஜின்.

2020 ல் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலாலும், கொரோனோவின் பாதிப்பாலும் பன்றி இறைச்சியின் விலை அதிகரிக்க, ஜின்னின் காட்டில் பண மழை பொழிந்தது. 2021-ல் உலகின் மிகப்பெரிய பன்றிப் பண்ணையாக உயர்ந்தது ‘முயூவன்’. நான்யாங் நகருக்கு அருகிலிருக்கும் ஜின்னின் பன்றிப்பண்ணைகளிலிருந்து வருடந்தோறும் இறைச்சிக்காக சுமார் 5 கோடி பன்றிகள் வெட்டப்படுகின்றன.

சீனா மட்டுமல்ல, உலகளவில் பன்றி இறைச்சியின் விலையை நிர்ணயிருக்கும் இடத்துக்கு உயர்ந்துவிட்டார் ஜின். அதுவும் முப்பது வருடங்களில். இன்று அவரது சொத்து மதிப்பு சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய்.

தொகுப்பு: த.சக்திவேல்…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading