World

ஏழு லட்ச ஆண்டுகால உறக்கம் கலைந்த ராட்சத எரிமலை!!

7 லட்சம் ஆண்டு கால உறக்கம் கலைந்தது: மீண்டும் விழித்த ராட்சத எரிமலை! – மறைந்துள்ள பேராபத்து

ஈரான் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தஃப்தான் எரிமலை சுமார் 9 செ.மீ. (3.5 அங்குலம்) உயர்ந்துள்ளதை செயற்கைக்கோள் தரவுகள் கண்டறிந்துள்ளன. இது சிறிய மாற்றமாகத் தோன்றினாலும், அந்த எரிமலையின் உட்பகுதியில் அழுத்தம் அதிகரித்து வருவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

மேகக்கூட்டங்களுக்கு ஊடாகவும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய ‘InSAR’ என்ற ரேடார் தொழில்நுட்பம் மற்றும் ‘Sentinel-1’ செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் இந்த மாற்றத்தைக் கண்காணித்தனர். கடந்த 10 மாதங்களில் தஃப்தான் எரிமலையின் உச்சிப்பகுதி 9 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு மீண்டும் குறையவில்லை என்பதால், உள்ளே இருக்கும் அழுத்தம் இன்னும் வெளியேறவில்லை என்பது உறுதியாகிறது. நிலப்பரப்பிற்கு அடியில் வெறும் 490 முதல் 630 மீ. ஆழத்திலேயே இந்த அழுத்தம் நிலைகொண்டுள்ளது. இது எரிமலைக் குழம்பை விட, அதன் மேல் பகுதியில் இருக்கும் வாயுக்களால் ஏற்படும் அழுத்தம் என்பதைக் காட்டுகிறது.

மனித வரலாற்றில் இந்த எரிமலை இதுவரை வெடித்ததாகப் பதிவுகள் இல்லை. இதனால் இது ஒரு ‘அழிந்துபோன எரிமலை’என்று கருதப்பட்டாலும், தற்போது கிடைத்துள்ள சிக்னல்கள் அது உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகின்றன. 12,927 அடி உயரமுள்ள இந்த எரிமலையின் உச்சியில் இருந்து தொடர்ந்து வாயுக்கள் வெளியேறுவது அதன் உட்புற அமைப்பு இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

தற்போதைய நிலையில் எரிமலைக் குழம்பு வெளியேறுவதை விட, நிலத்தடி வெப்பத்தினால் உருவாகும் நீராவியால் ஏற்படும் திடீர் வெடிப்புகளுக்கே அதிக வாய்ப்புள்ளது. கந்தக வாயுக்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் அருகிலுள்ள ‘காஷ்’ போன்ற நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு முன்னெச்சரிக்கை அழைப்பு மட்டுமே தவிர, பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலையின் மீது ஜி.பி.எஸ் (GPS) கருவிகள், நில அதிர்வு மானிகள் (Seismometers) போன்றவற்றை நிறுவித் தொடர்ச்சியாகக் கண்காணிக்க ஈரான் அரசுக்கு விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் நிலத்தடி ஆய்வுகள் ஒருங்கிணைந்து செயல்படும்போது, இது போன்ற இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். இந்த ஆய்வு Geophysical Research Letters இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading