Local

ஐ. தே.கட்சியின் சில உறுப்பினர்கள் இன்று மொட்டு கட்சியின் விசுவாசிகள்!

அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஐக்கிய மக்கள் சக்திமீது கொத்தணிக் குண்டு தாக்குதலை நடத்துவதற்காக சஜித் ஆதரவு அணி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சியின் சில உறுப்பினர்கள் இன்று மொட்டு கட்சியின் விசுவாசிகளாக மாறிவிட்டனர். எனவேதான் அரசாங்கத்தை விமர்சிப்பதைவிடுத்து, அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் கனவில் ‘டீல்’ அரசியல் செய்கின்றனர்.

அரசாங்கம் பல தவறுகளை இழைத்துவருகின்றது. மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கத்தின் குறைகளை மூடிமறைத்து மக்களை திசைதிருப்புவதற்காகவே எம்மை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை ரணில் குழுவினர் எடுத்துள்ளனர். அவர்களை ஐக்கிய தேசியக்கட்சியினர் எனக் கூறமுடியாது. ஏனெனில் எமது பக்கமே தூய்மையான ஐ.தே.க. உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

எமது கூட்டணிமீது பயம்வந்துவிட்டது. இதன்காரணமாகவே சிறிகொத்தவில் இருந்தும், மொட்டு கட்சியில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்திமீது கொத்தணி குண்டுகள் உட்பட அனைத்துவிதமான குண்டு தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

எதுஎப்படியிருந்தாலும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். சஜித்மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading