Local

ஒபாமாவின் சாதனையை முறியடித்தார் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%) என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பைடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading