Local

ஒரு மாதமாகியும் மஹிந்த அரசை எந்த நாடுமே வாழ்த்தவே இல்லை! – சர்வதேச ரீதியில் அங்கீகாரம் இல்லாத பின்னடைவு நிலை

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆட்சி மாற்றம் பற்றி இலங்கைத் தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. எனினும், எந்தவொரு நாடும், வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

முன்னதாக, சீனத் தூதுவர் செங் ஷியுவான், மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 12ஆம் திகதி சந்தித்து வாழ்த்துக் கூறியிருந்தார். எனினும், சீன அரசு இந்தச் சந்திப்புக் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. உத்தியோகபூர்வ வாழ்த்துச் செய்தி பீஜிங்கில் இருந்து அனுப்பப்படவும் இல்லை.

அதைவிட மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அதே நாளன்று, அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவையும், சீனத் தூதுவர் சந்தித்திருந்தார்.

பாகிஸ்தான் தூதுவர் இம்மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அதேவேளை, சபாநாயகரையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடியிருந்தார்.

வேறு எந்தவொரு நாடும், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கவோ, வாழ்த்துக் கூறவோ இல்லை.

புரூண்டியின் பிரதிநிதி ஒருவரை மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டது. எனினும், மஹிந்தவைச் சந்தித்தவர் ஒரு இராஜதந்திரியா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கையில் புரூண்டிக்கு தூதரகம் கிடையாது. புதுடில்லியில்தான் தூதரகம் ஒன்று உள்ளது. அங்கு பெண் தூதுவர் ஒருவரே இருக்கின்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அரசு ஒன்று மாறும் போது, வாழ்த்துச் செய்தியை அனுப்புவது இராஜதந்திர நடைமுறையாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு ஒரு மாதமாகியும், எந்தவொரு நாடும் உத்தியோகபூர்வமாக வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading