Local

கை விட்டுப் போனாலும் மொட்டு வாடாதாம்!

மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனத் தெரிவித்துள்ள சிறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “அவர்கள் தனித்துச் செல்வதற்கு முன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றார்.

அநுராதபுரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாகவுள்ளது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்த அவர், எனவே, மாகாண சபை தேர்தலை, வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார். 

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டு உள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமெனத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலிலும் கூட்டணியாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளைக் கைப்பற்றும் என்றார். .

“கூட்டணியில் இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துகள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் உள்ளன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பிறகே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading