கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்கா மருந்துகளை கடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு

உலக அளவில் கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாகி வரும் நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடான அமெரிக்கா மருந்து உபகரணங்களைக் கடத்தியுள்ளதாக ஜேர்மனியும், கனடாவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.
அதாவது கிட்டத்தட்ட 2 இலட்சம் N95 ரக முகக் கவசங்களுடன் ஜேர்மனி நோக்கிப் புறப்பட்ட விமானம் பாங்கொக்கில் தரித்து நிறுத்தப் பட்டிருந்த போது அமெரிக்க அரச அதிகாரிகளால் குறித்த சப்ளைகள் கடத்தப் பட்டுள்ளதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது. இந்த முகக் கவசங்கள் 3M என்ற அமெரிக்க கம்பனியால் சீனாவில் தயாரிக்கப் பட்ட போதும் பேர்லினுக்காக இவை வாங்கப் பட்டிருந்தது.
குறித்த 3M நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்பினால் கடும் அழுத்தம் பிரயோகிக்கப் பட்டதாகவும். இக்கம்பனி அமெரிக்காவைச் சேர்ந்ததாக இருந்தாலும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கு இந்த கொரோனா தொற்று அபாய சமயத்தில் சாதகமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப் பட்டிருந்தது. ஏற்கனவே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ (America First) என்ற கொள்கையுடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற நோய்த் தொற்று பேரிடர் தருணத்தில் தேசிய அளவில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொண்டு மருத்துவ உபகரணங்களைப் போதுமான அளவில் வழங்கவோ அல்லது தயாரிக்கவோ இயலாத அமெரிக்காவின் போக்கும், முன்னேற்பாடாக செயற்பட முடியாத இயலாமையையும் இது உணர்த்துகின்றது. இந்நேரத்தில் அமெரிக்காவின் முன்னால் தலைவர்களும் அவர்களது கொள்கைகளும் தான் இதற்குக் காரணம் என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே கொரோனா பெரும் தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து தயாரித்து வந்த CureVac என்ற ஜேர்மனியின் மருந்துக் கம்பனியை விலை கொடுத்து வாங்க வெள்ளை மாளிகை முயன்றதால் அமெரிக்காவுக்கும், ஜேர்மனிக்கும் இடையே உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவ, அத்தியாவசியத் தேவைப் பணியாளர்கள் கடக்கும் அமெரிக்காவுடனான சில எல்லைகளை கனடா இன்னமும் திறந்து வைத்துள்ளது.
இந்நிலையில் கனடா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளும் இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்கா நடந்து கொள்ளும் போக்குக் குறித்து முறைப்பாடு செய்துள்ளன.
