Local

கொரோனா இழப்புகளை சீர்செய்ய 12 ஆண்டுகள் செல்லுமாம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை 3 அலைகளை நாடு எதிா்கொண்டுள்ளது. இந்நிலையில், அத்தொற்று பரவல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்த அறிக்கையை ஆா்பிஐ வெளியிட்டது. அதில், ‘‘கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமாா் ரூ.52 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் நிதியாண்டில் ரூ.19.1 லட்சம் கோடியும், 2022 ஆம் நிதியாண்டில் ரூ.17.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. 2023 ஆம் நிதியாண்டில் அந்த இழப்பு ரூ.16.4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் மீண்டுவந்த நிலையில், பல அலைகளாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. 2020 – 21 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவந்த நிலையில், 2021 – 22 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் அடுத்த அலை பரவியது.
கடந்த ஜனவரியில் பரவிய 3 ஆவது அலை பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை சிறிது பாதித்தது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் கொரோனா தொற்று பரவல் அலைகளின் அடிப்படையிலேயே அமைந்தது. தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதலால், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளா்ச்சியையும் பாதித்துள்ளது.
2013 ஆம் நிதியாண்டு முதல் 2020 ஆம் நிதியாண்டு வரை நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளா்ச்சி கண்டது. அதிலும் 2013 முதல் 2017 ஆம் நிதியாண்டு வரை சராசரி வளா்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. கொரோனா தொற்று பரவலால் நாடு சந்தித்த இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 2035 ஆம் நிதியாண்டு வரை ஆகலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆா்பிஐ-யின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதைத் தயாரித்தவா்களின் கருத்தே அன்றி, ரிசா்வ் வங்கியின் கருத்தாகக் கொள்ளப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading