கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு: கண்காணிப்பை வலுப்படுத்துமாறு வலியுறுத்தல்
கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் JN-1 திரிபு மற்றும் இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள JN-1 திரிப்பானது ஆபத்து குறைவாக இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், குறித்த வைரஸின் பரிணாமத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் குளிர் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பிற தொற்றுநோய் மற்றும் வைரஸ் பாதிப்பு காரணமாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
