சந்திரிகாவின் சாதனை முறியடிக்கப்படுமா?
.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற வித்தியாசமான தேர்தலாகும்.
எல்லாத் தேர்தல்களும் இருமுனைத் தேர்தல்கள்தான்.ஆனால்,இம்முறைத் தேர்தல்தான் மும்முனைத் தேர்தலாக மாறியுள்ளது.
அனுர-ரணில்-சஜித்….
இதனால்தான் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தைத் தாண்டமாட்டார்கள் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனால்,இதுவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அதிக விகிதத்தைப் பெற்று சாதனை படைத்து முன்னணியில் இருப்பவர் சந்திரிக்காதான்.62.28 வீதம்.
இதுவரை யாரும் அந்தப் பதிவை-சாதனையை உடைக்கவில்லை.
இந்தத் தேர்தலில் அது நடக்குமா என்ற கேள்வி சிலருக்கு எழுகிறது.
இந்தச் சாதனையை சந்திரிக்கா நிகழ்த்தியது எப்படி?
அதுபற்றித்தான் பார்க்கப்போகிறோம் இந்தப் பதிவில்…
அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலம்.
கொல்லப்படுகிறார் விஜயகுமாரதுங்க.
அவர் நடிகர் -மக்கள் கட்சியின் தலைவர்-சந்திரிகாவின் கணவர் ..
அதற்குப் பின் நாட்டில் இருக்க முடியாது சந்திரிக்காவுக்கு…
பாதுகாப்புப் பிரச்சினை.
அவருக்கும் பாதுகாப்பில்லை.அவரது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பில்லை.
தப்பிச் செல்கிறார் வெளிநாட்டுக்கு…
மீண்டும் நாடு திரும்புகிறார் 90இல்…
வீழ்ந்து கிடக்கிறது சுதந்திர கட்சி.புது இரத்தம் இள இரத்தம் தேவை அதற்கு..
அந்த இளம் இரத்தமாக-புது இரத்தமாக சந்திரிக்கா…
அப்போது நாட்டின் ஜனாதிபதியாக ஆர்.பிரேமதாசா.
ஆனால்,மெல்ல ஆட்டம் காணுகிறது அவரின் அரசு.
கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் பிரச்சினை.
அவர் ஜனாதிபதியாகி புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தமை-600 பொலிஸார் புலிகளால் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தமை உள்ளிட்ட காரணங்களால் நாட்டு மக்கள் பிரேமதாசா மீது கடும் கோபத்தில்…
கட்சிக்குள்ளும் அதே நிலை…
கட்சிக்குள் உருவாகிறது ஒரு குழு.பிரேமதாசாவுக்கு எதிரான குழு.காமினி திஸாநாயக்க,லலித் அத்துலத் முதலி ஆகியோரின் தலைமையில்…
பிரேமதாசாவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருகிறார்கள் அவர்கள். புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமையை எதிர்த்து…
இதனால் ஆத்திரமடைந்த பிரேமதாசா காமினி ,லலித் உள்ளிட்ட 8 பேரை கட்சியில் இருந்து நீக்குகிறார்.
இதனால் உருவாகிறது புதிய கட்சி.லலித் தலைமையில்…ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக …
இந்த நிலையில்தான் சுட்டுக் கொல்லாப்படுகிறார் லலித்.பிரேமதாசாவின்மீதே வீழ்கிறது அந்தப் பலி.
இதனால் இன்னும் நெருக்கடி அவருக்கு…
ஒரு வாரத்தில் பிரேமதாசாவும் சரி..புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்…
இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு பின்னடைவைக் கொடுக்கின்றன.
பிரேமதாசாவின் கொலையின் பின் ஜனாதிபதியாகிறார் டி.பி.விஜயதுங்க.ரணில் விக்கிரமசிங்க பிரதமர்..
அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல்.
அந்தத் தேர்தலில் ஆட்டங்காணுகிறது ஐக்கிய தேசிய கட்சி.
மேல் மாகாண சபை சந்திரிக்கா வசம்.மேல் மாகாண முதலமைச்சராக சந்திரிகா.
அன்று பிடித்த சனிதான் ஐக்கிய தேசிய கட்சிக்கு.இப்போது வரைக்கும் பிடித்து ஆட்டுகிறது.
93ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து 94இல் நாடாளுமன்றத் தேர்தல்.அதிலும் ஐக்கிய தேசிய கட்சி அவுட்.
சந்திரிகா பிரதமர்.
ஜனாதிபதி பதவி ஐக்கிய தேசிய கட்சியிடம்.
நாடாளுமன்றம் சந்திரிகாவிடம்.அவரின் தலைமையிலான பொதுஜன முன்னணியிடம்…
2 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்.
இந்த பக்கம் சந்திரிகா.அந்த பக்கம் காமினி திஸாநாயக்க…
லலித் அத்துலத் முதலியின் மரணத்தைத் தொடர்ந்து காமினி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்.
அவரையே வேட்பாளராக நிறுத்துகிறது ஐ.தே.க.
தேர்தல் பிரசாரங்கள் ஏறிப்போகும் தருணம் அது.
தொட்டலங்கவில் காமினியின் பிரசார கூட்டம்.கொல்லப்படுகிறார் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்…
அதனைத் தொடர்ந்து காமினியின் மனைவி சிறிமா திஸாநாயக்க களமிறக்கப்டுகிறார்.
இப்போது சந்திரிக்காவுக்குப் போட்டியாக சிறிமா திஸாநாயக்க ..
இரண்டு பிரதான கட்சிகளிலும் இரண்டு பெண் வேட்பாளர்கள்.
இறுதியில் வெற்றிபெறுகிறார் சந்திரிக்கா.
சும்மா அப்படி இப்படி வெற்றியல்ல.அபார வெற்றி.
62.28 வீதத்தால்.4709205 வாக்குகள்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிமா திஸாநாயக்க 35.91 வீதம்.2715283 வாக்குகள்.
கிட்டத்தட்ட 19 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் அந்த வெற்றி.
அணைத்து மாவட்டங்களிலும் வெற்றி.
196 தேர்தல் தொகுதிகளில் 195 சந்திரிக்கா வசம்.
ஒரேயொரு தொகுதியில் மாத்திரம்தான் தோல்வி.அது பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தொகுதி.
சந்திரிக்காவின் இந்த சாதனை அப்படியே உள்ளது.இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இந்தத் தேர்தலிலும் அது முறியடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று…
[ஊடகவியலாளர் எம்.ஐ முபாறக் ]

You must be logged in to post a comment.