சலாஹ்வுக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது!!!
தொழில்முறை கால்பந்து வீரர்களின் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை லிவர்பூல் வீரர் மொஹமது சலாஹ் வென்றதோடு அஷ்டன் வில்லா மத்திய கள வீரர் மோர்கன் ரொஜர் இளம் வீரராக தெரிவானார்.
பிரட்டனின் மான்செஸ்டர் ஒபரா ஹவுஸில் நேற்று முன்தினம் நடந்த இந்த விருது நிகழ்ச்சியில் எகிப்து நாட்டைச் சேர்ந்த 33 வயது சலாஹ், லிவர்பூல் அணி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல உதவிய நிலையிலேயே விருதுக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் இந்த விருதை மூன்று முறை வெல்லும் முதல் வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.
கடந்த பருவத்தில் சலாஹ் 29 கோல்களுடன் 18 கோல் உதவிகளையும் வழங்கிய நிலையில் லிவர்பூல் அணி சாதனை எண்ணிக்கையாக 20 ஆவது முறையாகவும் இங்கிலாந்தின் உயரிய கால்பந்து பட்டத்தை கைப்பற்றியது. சலாஹ் இதற்கு முன்னர் 2017 மற்றும் 2021 இலும் இந்த விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொஹமது சலாஹ் மொத்தமாக 657 போட்டிகளில் 323 கோல்களை அடித்திருப்பதோடு லிவர்பூல் அணிக்காக மாத்திரம் 246 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளம் வீரருக்கான விருதை வென்ற 23 வயது ரொஜர்ஸ் 2024 பெப்ரவரியில் 15 மில்லியன் பௌண்ட்களுக்கு வில்லா அணியுடன் இணைந்ததன் பின்னர் அந்த அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆர்சனல் மத்திய கள வீராங்கனையான மரியோனா கல்டன்டே ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தெரிவானார். ஸ்பெயினைச் சேர்ந்த கல்டன்டே ஆர்சனல் கழகத்திற்காக தனது முதல் பருவத்தில் ஒன்பது கோல்களை பெற்றார். இதில் ஆர்சனல் பட்டம் வென்ற சம்பியன்ஸ் லீக்கில் மாத்திரம் எட்டு கோல்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.