சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ராஜபக்ச குடும்பம் செலுத்த வேண்டிய மில்லியன் தொகை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதவிக் காலத்தில் வாடகை விமானங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பல வெளிநாட்டுப் பயணங்களுக்காக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 96.22 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலுத்தப்படாத பணம் பற்றிய தகவல்களை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ், பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் லலித் வீரதுங்க, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் அடங்கிய குழுக்கள் பங்கேற்ற 2014 ஆம் ஆண்டுக்கான பல வெளிநாட்டுப் பயணங்களுக்கு இந்த நிலுவைத் தொகைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இத்தாலி பயணத்திற்காகவே அதிக நிலுவைத் தொகை உள்ளது. ஷிரந்தி ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன மற்றும் பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்ட 70 பேர் கொண்ட குழு பங்கேற்ற அந்த பயணத்திற்காக செலுத்தப்பட வேண்டிய 43.47 மில்லியன் ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலதிகமாக, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 43 பேருடன் நேபாளத்திற்கு மேற்கொண்ட பயணத்திற்காக 28.8 மில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
அதே ஆண்டில் ஷிரந்தி ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன மற்றும் லலித் வீரதுங்க உள்ளிட்ட 59 பேர் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர்.

அதற்காக ஜனாதிபதி அலுவலகத்தால் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 20.35 மில்லியன் ரூபாவும் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2014 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட 57 பேர் திருப்பதிக்கு மேற்கொண்ட பயணத்திற்காக செலுத்தப்பட வேண்டிய 3.6 மில்லியன் ரூபாவும் இதுவரை செலுத்தப்படவில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான கொடுப்பனவு தவணைகள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.