தேடுவாரற்று கிடந்த சதாம் உசேன் விமானங்கள் விற்பனைக்கு
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய விஐபி போயிங் 747SP (Boeing 747SP) ரக விமானம் உட்பட இரண்டு விமானங்களை ஈராக் ஏர்வேஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாப்பதற்காகத் தென்மேற்கு துனிசியாவில் உள்ள டோசியர்-நெஃப்டா (Tozeur-Nefta) சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த விமானங்கள், சுமார் 35 ஆண்டுகளாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1982-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட YI-ALM என்ற பதிவு எண் கொண்ட போயிங் 747SP விமானம், ஈராக் அரசின் முக்கியப் பிரமுகர்கள் பயணத்திற்காகப் பிரத்யேக ஓய்வறை மற்றும் மாநாட்டு அறை வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
அதனுடன் YI-AGP என்ற மற்றொரு போயிங் 747-200 விமானமும் விற்பனைப் பட்டியலில் உள்ளது. 1991-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு சர்வதேசத் தடைகள், சட்டப் போராட்டங்கள் மற்றும் விமான நிலைய நிறுத்தக் கட்டண நிலுவைகள் காரணமாக இந்த விமானங்கள் மீண்டும் ஈராக்கிற்குத் திரும்பவில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு விமானத்தின் மதிப்பும் 9,00,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7.5 கோடி / £680,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2010 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்த விமானங்களை விற்பனை செய்ய ஈராக் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
2023-ஆம் ஆண்டில் ஒரு விமானத்தின் மதிப்பு 4,94,000 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உதிரிபாகங்களுக்கான தேவை காரணமாக விலை சுமார் 82 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்கள் தற்போது உள்ள நிலையிலேயே (as they stand) எவ்விதத் தொழில்நுட்ப உத்தரவாதமும் இன்றி விற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 20 சதவீத முன்பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவில் உள்ள ஈராக் தூதரகத்தில் டிசம்பர் 21, 2026 முதல் ஜனவரி 5, 2027 வரை விற்பனைக் குழு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் என்றும், ஈராக் போக்குவரத்து அமைச்சரின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு விற்பனை உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.