Local

சிறுவர்களை தாக்கும் புதிய நோய் 6 சிறார்கள் தீவிர சிகிச்சை பிரிவில்!

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் ஒரு வீதமானோருக்கு கவசாகி என்ற நோயை ஒத்த அறிகுறிகளுடன் புதிய நோய் நிலைமை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி ,இந்த நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியருமான வாசன் ரட்னசிங்கம் தெரிவித்தார்.

தற்போது சிறுவர்களைத் தாக்கும் இந்நோய் நிலைமை தொடர்பில் வினவியபோது அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

இதன்படி ,கொவிட் -19 தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது குறைவாகக் காணப்பட்டாலும் ஏனைய நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அளவு அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் ஆழமாக அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் தற்போது கொவிட் -19 தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு தொற்றின் பின்னர் சில உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட இந்த தொற்று தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சத வீதமான சிறுவர்களுக்கு இவ்வாறான நோய் ஏற்படுகிறது. 8 – 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர். கொவிட் தொற்றுக்கு உள்ளான பின்னர் ஏன் இவ்வாறானதொரு நோய் நிலைமை ஏற்படுகிறது என்பது இனங்காணப்படவில்லை.

மேலும் ,இந்நோய் நிலைக்கு உள்ளாகும் சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கவசாகி நோய்’ என்ற நோயின் அறிகுறிகளை ஒத்ததாகவே இந்த நோய்க்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன. ஆனால் இதனை கவசாகி நோய் என்று கருத முடியாது.

காரணம் இந்த நோயானது உடலின் எல்லா பகுதிகளையும் பாதிப்பதாகவே காணப்படுகிறது. குறிப்பாக இதயத்தொகுதி , சுவாசத்தொகுதி, இரத்ததொகுதி, சிறுநீரக தொகுதி மற்றும் உணவு தொகுதி என அனைத்தையும் பாதிக்கக் கூடியதாக இந்த நோய் காணப்படுகிறது

இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் மற்றும் நாக்கு சிவத்தல், உதடுகள், கை மற்றும் கால்கள் வீங்குதல், வயிற்றுவலி, வயிற்றோட்டம், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அதிகளவில் வாந்தி ஏற்படக் கூடிய நிலையும் இருக்கிறது. இவற்றுடன் தலைவலி, உடற்சோர்வு மற்றும் உளநிலை பாதிப்பு என்பனவும் ஏற்படும்.

அவ்வாறான ,நோய் நிலைமை கொவிட் -19 தொற்றுக்கு பின்னரே ஏற்படுவதாக பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளது. எனவே சிறுவர்களை மிக அவதானமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. இந்த நோய் நிலைமை ஏற்படும் போது தாமதிக்காமல் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading