Local

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பை தடுக்குமாறு மனு தாக்கல்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண்பாடுகள் உள்ளதாகவும், இதுதொடர்பிலான அரசியலமைப்புச் சிக்கல் தீர்க்கப்படும் வரை தேர்தலுக்கான திகதி அறிவிப்பை ஒத்திவைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகரும் சட்டத்துறை பட்டதாரியுமான சி.டி.லீனா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜூலை 8ஆம் திகதி முதல் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் 1ஆம் திகதி திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை தேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த மனுவுக்கு எதிராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பல தரப்பினரும் இடையீட்டு மனுதாரர்களாக ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 வருடத்திலிருந்து 5 வருடங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இதன்மூலம் மக்களின் இறையாண்மை மீறப்பட்டுள்ளதாகவும், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல எனவும், எந்தவொரு நபருக்கும் நன்மை செய்யும் நோக்கில் தான் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை எனவும், இந்த நாட்டின் அரசியலமைப்பு திருத்தங்களில் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பிரச்சினைக்குரிய வகையில் செயற்பட்டு வருவதால், இது தொடர்பான உரையாடலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும் கூறியுள்ளார்.

19வது திருத்தச்சட்டம் தற்போதைய அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் பரந்தப்பட்டளவில் ஆராயப்பட்டது.

அதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்பட்டமைக்காக சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென நீதியரசர்கள் குழாம் தீர்மானித்திருக்கவில்லை.

19வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் உள்ளதால் அதன் சரத்துகள் குறித்து முன்வைக்கப்படும் வியாக்கியானங்கள் பொறுத்தமற்றதாக அமையும் என சட்ட நிர்புணர்கள் கூறுகின்றனர்.

மேலும், 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் 6 வருடங்களாக இருக்க வேண்டுமா என உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார்.

19வது திருத்தச்சட்டம் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர் நீதிமன்றம் அதன்போது தீர்ப்பளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதனால் சி.டி.லீனாவின் இந்த மனுவால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் பாதிப்படையாதென சட்ட நிர்புணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading