Local

ஞானசார தேரருக்கு காய்ச்சலா?எப்போது குணமடையும் என்று கேட்ட நீதிபதி!

இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நேற்று (15) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் காலை 8.40 மணியளவில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது ஞானசார தேரர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

அவர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச மன்றில் ஆஜராகியிருந்ததுடன், ஞானசார தேரர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராக முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியமளிக்கவிருந்தார்.

அரச தரப்பு சாட்சியாளராக அவர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கவிருந்ததுடன் அதற்கான அறிவித்தல் அவருக்கு ஏற்கனவே அனுப்பட்டிருந்தது.

எனினும் பிரதிவாதி ஞானசார தேரர் இல்லாத நிலையில் அச்சாட்சியத்தை நெறிப்படுத்த முடியாத சூழல் நிலவியது.

இதன்போது திறந்த நீதிமன்றில் பிரதிவாதி ஞானசார தேரரின் சட்டத்தரணியை விளித்த நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, அவருக்கு என்ன காய்ச்சல்? குணமடைய எத்தனை நாள் செல்லும்? அதனை குறிப்பிட்டால் அந்த விடயத்தையும் கருத்தில் எடுத்து அதற்கப்பால் ஒரு நாளை விசாரணைக்காக நிர்ணயிக்க முடியும் என நாசூக்காக கிண்டலடித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை நீதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை கடந்த 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்திருந்தது.

2016 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு – கிருளப்பனையில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவையின் 291( அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர் புரிந்ததாக சட்ட மா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது, கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும், கேவலமான வசங்களைக் கொண்டு இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழி படும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாகவும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்படுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜராவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணி வஸீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினர் ஆஜராவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading