Local

டிப்பர் கொட்டிய மண்ணுக்குள் சிக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் பலி! – மன்னாரில் பரிதாபச் சம்பவம்

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார்.

மன்னார், சிலாபத்துறைப் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.

மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் சென்றனர். அவர்கள் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிய பின்னர் அதனை சிலாபத்துறைக்குக் கொண்டு சென்றனர். அதன்போது வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் 3 உதவியாளர்கள் முன் இருக்கையில் இருந்துள்ளனர். 5ஆவது நபர் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றப்பட்ட பகுதிக்கு மேல் ஏறிப் படுத்துள்ளார்.

டிப்பர் வாகனம் குஞ்சுக்குளத்தில் இருந்து சிலாபத்துறை நோக்கிச் சென்ற நிலையில், சிலாபத்துறைப் பகுதியில் உரிய இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது.

இதன்போது மண் மீது ஏறிப் படுத்தவர் உறக்க நிலைக்குச் சென்றுள்ளார். அதனால் பறிக்கப்பட்ட மண்ணுக்குள் அவர் சிக்குண்டுள்ளார்.

மண் கொட்டப்பட்ட நிலையில் மீண்டும் டிப்பர் வாகனமும் அதில் பயணித்தவர்களும் குஞ்சுக்குளம் பகுதிக்குச் சென்ற நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் ஏனைய மூவரும், அந்த நபரைத் தேடியபோது அவர் அங்கே இருக்கவில்லை.

மீண்டும் மண் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவர் அங்கே மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அந்தக் குடும்பஸ்தரை மீட்டு முருங்கன் வைத்தியசாலைக்குக் கெண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருடையது எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை சிலாபத்துறை மற்றும் முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading