World

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகள் கொலை!

ஆரல்வாய்மொழி அருகே முன்விரோதம் காரணமாக, கோழிப்பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் அவ்வையார் அம்மன் கோயில் பின்புறம் தோவாளை சானல் செல்கிறது. இந்த சானல் கரையோரம் ஒரு தோட்டத்தில்  துவரங்காடு மத்தியாஸ் நகரை சேர்ந்த சுரேஷ் (31) 4 ஷெட்டுகள் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுரேஷ், தனது நண்பரான துவரங்காடு மத்திய நகரை சேர்ந்த சாஜன்(37) என்பவருக்கு 2 ெஷட்டுகளை கொடுத்துள்ளார். சாஜன் அதனை கவனித்து வந்த நிலையில் சுரேஷின் கோழிப்பண்ணையில் இருந்து தீவனங்களை எடுத்து சாஜன் தனது செட்டில் உள்ள கோழிகளுக்கு கொடுத்துள்ளராம். இந்த தகவல் தெரிந்ததால் சுரேஷ் சாஜனை கழற்றி விட்டுள்ளார்.

அதன்பின்னர் திட்டுவிளை மார்த்தால் பகுதியை சேர்ந்த ராஜன்(28) என்பவருக்கு அந்த 2 ஷெட்டுகளையும் கொடுத்துள்ளார். அவர் அதில் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த பண்ணைகளில் 2 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சாஜன் மீண்டும் கோழிபண்ணைக்கு வந்து சுரேசை தேடியுள்ளார். அவர் இல்லை என ஊழியர் கூறியதால் அவருக்கு மிரட்டல் விடுத்துவிட்டு சாஜன் சென்றுள்ளார். இந்தநிலையில் இன்று காலை ராஜன் தனது கோழிப்பண்ணைக்கு சென்றபோது ஏராளமான கோழிகள் செத்தும், சில உயிருக்கு போராடியும் கொண்டிருந்தன. இதையடுத்து கோழிகள் குடிக்கும் தண்ணீரை பார்த்தும் அமிலத்தன்மை இருந்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மொத்தம் 6 ஆயிரம் கோழிகள் செத்து மடிந்தன. இதையடுத்து ராஜன், சுரேசுக்கு  தகவல் கொடுத்தார்.

அவர் விரைந்து வந்து கோழிகளுக்கு தண்ணீர் பிடித்து வைக்கும் தொட்டியை பார்த்துள்ளனர். தொட்டியில் இருந்து விஷ வாடை வந்துள்ளது. அருகில் ஒரு விஷ பாட்டில் கிடந்தது. கோழிப்பண்ணை முள்வேலியை அகற்றிவிட்டு யாரோ உள்ளே நுழைந்த தடமும் இருந்தது. இதுகுறித்து ராஜன் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி வேணுகோபால், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து ராஜன் அளித்த புகாரில், சாஜன் பண்ணைக்குள் புகுந்து கோழிகள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்து கோழிகளை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். புகாரின்படி போலீசார் சாஜனை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரல்வாய்மொழி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading