Cinema

தமிழ் சினிமாவின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

ஒவ்வொரு மொழி சினிமாவிலும் லேடி சூப்பர் ஸ்டார்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள் / பறக்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார் நயன்தாரா. அவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. தெலுங்கு மலையாளத்திலும் அவருக்கு மார்க்கெட் இருக்கிறது.

மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியரை லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இந்தப் புகழ் அவர் வாங்கும் சம்பளம் மற்றும் ஹிட் படங்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

ஆனால், தமிழ் சினிமாவில் 1950-களிலேயே லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்பட்டவர் வைஜயந்தி மாலா. 1949 ஆம் ஆண்டு வெளியான ‘வாழ்க்கை’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வைஜயந்தி மாலா, சிறந்த நடனக் கலைஞர்; பாடகி.

காரைக்குடியில் இருந்து ஏவி.எம் ஸ்டூடியோ சென்னை வடபழனிக்கு இடம் மாறியதும் தயாரிக்கப்பட்ட முதல் படம்‘வாழ்க்கை’. இந்தப் படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுக செய்ய நினைத்தார் ஏவி.எம்.செட்டியார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஹீரோயின்கள் கொஞ்சம் வயதானவர்களாகவே இருந்த நிலையில், இளம் நாயகியை அறிமுகம் செய்ய நினைத்தார் அவர். 17 வயதே நிரம்பிய வைஜயந்தி மாலாவை நடன நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ஸ்கிரிப்ட் ரைட்டர் ஒருவர் ஏவி.எம்மிடம் சொல்ல, அவரைப் பார்த்தார். அவர் நடனத்தையும் பார்த்தார்.

உடனே அவரை ஹீரோயினாக்க பேசினார். வைஜயந்தி வீட்டிலும் ஒப்புக்கொள்ள, ‘வாழ்க்கை’க்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஏவி.எம், வைஜயந்திமாலாவின் வாழ்க்கை வேற லெவல் ஆனது.

அந்தப் படத்துக்காக வைஜயந்தி மாலாவுக்கு வழங்கப்பட்ட மாத சம்பளம், ரூ.2,350. இது அந்த காலகட்டத்தில் நாயகிக்கு வழங்கப்பட்ட அதிகப்பட்ச சம்பளம்.

இந்தப் படத்தில் டி.ஆ.ராமச்சந்திரன், எம்.எஸ்.திரவுபதி, எஸ்.வி.சகஸ்கரநாமம் உட்பட பலர் நடித்தனர். ஆர். சுதர்சனம் இசை அமைத்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

படம் வெளியான நேரத்தில் வைஜயந்தி மாலாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் விற்கப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அவருக்கான வரவேற்பை.

பிறகு தெலுங்கு, இந்தியிலும் ‘வாழ்க்கை’ ரீமேக் செய்யப்பட, வைஜயந்தி மாலாவுக்கு இந்தி வாய்ப்புகள் குவிந்தன. இந்தியிலும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அங்கு நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கொடி கட்டிப் பறந்தார் வைஜயந்தி மாலா.

தமிழில் ‘வஞ்சிக்கோட்டை வாலிபனில்’ நளினமாக நாட்டியமாடியதையும், தேன் நிலவு, இரும்புத்திரை என்று சில தமிழ்ப்படங்களில் கச்சிதமான உடல் தோற்றத்துடன் நடித்தவரையும் அவ்வளவு லேசில் தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிட முடியாது.

அந்தக் காலகட்டத்தில் மற்ற டாப் ஹீரோயின்களை விட அதிக சம்பளம் வாங்கியவர் இவர்தான். அதனால் இவர் தமிழ், இந்தி சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading