Sports

தோனி – ஜடேஜா போராட்டம் வீணானது ராஜஸ்தான் திரில் வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

பட்லர் அரைசதம்

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.

இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் ரன் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதையடுத்து ஹெட்மையர் மற்றும் துருஷ் ஷோரல் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரிகளை அடித்து நொறுக்கியது. முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மொயின் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

கான்வே 37 பந்துகளில் அரைசதம்
இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 (19) ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே(8), மொயின் அலி(7), அம்பத்தி ராயுடு(1) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக ஜடேஜாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர்.

கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியில் ஜடேஜா 25 (15), தோனி 32 (17) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஷ்வின், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாம்பா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading