Lead News

நவ. 21 முதல் ‘Aqua Planet – Srilanka, International Expo – 2025’ கண்காட்சி

சர்வதேச மீனவ தினத்திற்கு இணையாக ‘Aqua Planet – Srilanka, International Expo – 2025’ கண்காட்சியை நடாத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 13 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘இலங்கை அலங்கார மீன்கள்’ மற்றும் ‘சீ பூட் பியெஸ்டா’ போன்ற தேசிய கண்காட்சிகளுக்கு அப்பால் சென்று உலகளாவிய மீன்பிடி தொழில்வாண்மையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அத்துறையில் ஆர்வங் காட்டுகின்றவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தப்படும் ‘Aqua Planet – Srilanka, International Expo – 2025’ சர்வதேச கண்காட்சி – 2025 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் மீன்பிடி வளங்கள், நீரியல் உயிரின வளர்ப்பு, பதனிடல், செயலாக்குநர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் மூலம் இலங்கையின் நீரியல் வளங்களை மேலோச்சுவதற்கும், பேண்தகு நிலைமை, புத்தாக்கம், வர்த்தகம், கல்வி மற்றும் நீலப் பொருளாதாரம் (சமுத்திரப் பொருளாதாரம்) கோட்பாட்டுத் தொனிப்பொருட்களின் கீழ் விசேட கவனம் செலுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சமுத்திரப் பாதுகாப்புப் பற்றிய கல்வியியலாளர்களின் கலந்துரையாடல், பேண்தகு தொழிநுட்பக் கண்காட்சி, வியாபார இணக்க அமர்வுகள் மற்றும் கடல் உணவுத் தயாரிப்புக்களில் சுழற்சிப் பொருளாதார உள்ளீடுகள் போன்ற தலைப்புக்கள் தொடர்பான செயலமர்வுகளை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பேண்தகு நடைமுறைகளை பாரம்பரிய துறைகளில் சேர்த்துக்கொண்டு இலங்கை இதுவரையில் பயன்படுத்தாத நீலப் பொருளாதார (சமுத்திர பொருளாதார) வாய்ப்புக்கள் மூலம் நாட்டின் பொருளாதார வெளியீடுகளை அதிகரிக்கின்ற வாய்ப்புக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கமைய, உத்தேச ‘Aqua Planet – Srilanka, International Expo – 2025’ சர்வதேச கண்காட்சியை நடாத்துவதற்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்

கொவிட் 19 தொற்றுநோயால் 2021 – 2024 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சுகாதார சேவை கருத்திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் அண்மைக்கால வளர்ச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய கருத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கோரல்களுக்கமைய, அரச முதலீட்டு வேலைத்திட்டங்களில் உட்சேர்;க்கப்பட்டுள்ள சுகாதாரத் துறையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்திட்டங்கள் மற்றும் புதிய தொடக்க முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி அரச முதலீட்டுக் குழு சுகாதாரத் துறையில் புதிய கருத்திட்டங்கள் பலவற்றை முதலீட்டு வேலைத்திட்டங்களில் உட்சேர்ப்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களில் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் நிதியொதுக்கீடு செய்யப்படும் கீழ்க்காணும் 09 புதிய கருத்திட்டங்களை அடுத்த ஆண்டில் அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • தேசிய வாய்ச்சுகாதார மதிப்பீடு – 2025/2026
  • உத்தேச சத்திரசிகிச்சை, இழையொளி அகநோக்கு (Endoscopy)அலகு மற்றும் இதய – தோள்பட்டை முன் சத்திரசிகிச்சை நோயாளர் விடுதியை நிர்மாணிப்பதற்காக குருநாகல் போதனா வைத்தியசாலையிலுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல்
  • மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் வசதிகளுடன் கூடிய மகப்பேற்று அலகுக்கான ஐந்து மாடிக் கட்டடத்தை நிர்மாணித்தல்
  • மஹரகம வாய்ச்சுகாதார சேவைகள் நிறுவனத்திற்கான வெளிநோயாளர் பிரிவு மற்றும் விசேட அலகுடன் கூடிய 5 மாடிக் கட்டடத்தை நிர்மாணித்தல்
  • தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் தொடர்பான நிறுவனத்தின் ஐந்து5 மாடிக் கட்டடத்தை நிர்மாணித்தல் (கொழும்பு சட்ட மருத்துவ அலுவலகத்திற்கான)
  • அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து, அவசர சிகிச்சை தொடர்பான சேவைகளுக்கான கட்டடத்தொகுதி கட்டம் – I மற்றும் கட்டம் – I I இனை நிர்மாணித்தல்
  • அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளை நிர்மாணித்தல்
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் அலகை விரிவுபடுத்தல்
  • இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய இதய நிலையத்தை நிர்மாணித்தல்

3. 2025 ஆம் ஆண்டு இடைப்போகத்தில் பயறு அறுவடைக் கொள்வனவு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின்கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 சிறுபோகத்திலும், இடைப்போகத்திலும் 16,500 ஹெக்ரெயார் நிலப்பரப்பில் பயறு பயிரிடப்பட்டுள்ளது. அதன்மூலம், 14,600 மெற்றிக்தொன் பயறு அறுவடை எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த அறுவடையில் 12,000 மெற்றிக்தொன் நேரடியாக சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயறு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தரகர்கள் மூலம் ஒருகிலோ பயறு ரூ. 450 குறைந்த தொகைக்கு கொள்வனவு செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதனால், விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு இயலுமாகும் வகையில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் தேசிய உணவு மேம்பாட்டு சபை விவசாயிகளின் பயறு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து தனியார் துறையினருடன் போட்டித்தன்மையின் அடிப்படையில் பயறு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. கண்டி பல்வித போக்குவரத்து முனைய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத சேவைக்கான உத்தேச கண்டி ஏழுமாடி தங்குமிடக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

கண்டி பல்வித போக்குவரத்து முனைய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத சேவைக்கான உத்தேச கண்டி ஏழுமாடி தங்குமிடக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக தேசிய போட்டி விலைமனு முறையைக் கடைப்பிடித்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 05 விலைமனுக்கள் கிடைத்துள்ளதுடன், அவற்றில் 04 விலைமனுக்கள் தொழிநுட்ப ரீதியாக பதிலளிக்கப்பட்டுள்ள விலைமுறிகளாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விலைமுறிகளுக்கு ஏற்புடைய மதிப்பீடுகளின் பின்னர், குறித்த ஒப்பந்தத்தை ரூ. 1.53 பில்லியனுக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) மாகா இன்ஜினியரிங்க் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்கு, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு விதந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க, குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்தல்

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அப்போது வேலைகள் ஆரம்பிக்கப்படாத 184 பாலங்களை நிர்மாணிப்பதற்கு 2022 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 142 பாலங்களில் 45 பாலங்களின் வேலைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 பாலங்களின் வேலைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் எஞ்சியுள்ள 74 பாலங்களின் வேலைகளை கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் மீண்டும் ஆரம்பித்து, அவற்றின் நிர்மாணப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குதல்
சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமை நேரங்களின் பின்னரும் கடமைகளில் ஈடுபடுவதற்கு நேரிடுகின்றமையால், அவர்களுக்கான விடுதி வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும். ஆயினும், அனைத்து சிறைச்சாலைகளிலும் போதியளவு விடுதி வசதிகள் இன்மையால், தற்போது காணப்படுகின்ற விடுதிகளை நவீனமயப்படுத்தல் மற்றும் இடவசதியுடன் கூடிய இடங்களில் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டமாக முன்னுரிமையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் கீழ்க்காணும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1. வெலிக்கட சிறைச்சாலையின் இரண்டு விடுதிகளை நிர்மாணித்தல்
2. அநுராதபுரம் சிறைச்சாலையின் ஒரு விடுதியை நிர்மாணித்தல்
3. அனைத்து சிறைச்சாலைகளிலும் விடுதிகளை நவீனமயப்படுத்தல் மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்தல்

7. ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை தனியார் முதலீட்டின் மூலம் பயனுள்ளதாக இயக்குதல்

ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை திட்டமிடல், நிர்மாணித்தல், நிதியிடல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் (DBFOM) வடிவமைப்பின் கீழ் இயக்குவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக 2024.07.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசுக்குச் சொந்தமான வர்த்தக ரீதியாக செயல்நுணுக்கமற்ற நிறுவனங்கள் பற்றிய மீளாய்வுக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவால் குறித்த திரைப்படப் பூங்காவின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை 30 ஆண்டுகளுக்கு திட்டமிடல், நிர்மாணித்தல், நிதியிடல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் (DBFOM) வடிவமைப்பின் கீழ் தனியார் முதலீட்டின் மூலம் இயக்குவதற்கும், அதற்கு ஆர்வங் காட்டுகின்ற முதலீட்டாளர்களுக்கு போட்டித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் தொடக்கம் கொலன்னாவ முனையம் வரைக்குமான 5 குழாய் வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. குறித்த குழாய் வழிகள் மிகவும் பழையவையாவதுடன், கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கசிவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால்,நம்பகமான குழாய்த் தொகுதி இருக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக இதற்கு முன்னரும் கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டிருப்பினும், குறித்த முன்மொழிவுகள் மூலம் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை. அதனால், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய பெறுகைச் செயன்முறையை முடிவுறுத்தி, கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து கொலன்னாவ முனையம் வரைக்கும் 18 அங்குலம் மற்றும் 14 அங்குலம் விட்டத்துடன் கூடிய குழாய் உள்வழியை சோதனை செய்யக்கூடிய வகையிலான இயந்திரோபகரணங்களைப் பயன்படுத்தக் கூடிய 2 குழாய் வழிகளை நிர்மாணித்தல், கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து சேரம் வாயில் வரைக்கும் 12 அங்குல விட்டத்துடன் கூடிய கடலுக்கு அடியில் செல்லும் குழாய் வழியை நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு துறைமுகம் மற்றும் கொலன்னாவ முனையங்களை தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் போன்ற கருத்திட்டக் கூறுகளுடன் கூடிய ‘கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டம்’ பொறியியல், பெறுகை, நிர்மாணித்தல் மற்றும் இயக்குதல் (நுPஊஊ) கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவ ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவ சட்டத்தின் 16 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய அரச கடன்முறிகளை வெளியிடும் அதிகாரம் பொதுத் தனிசு மூகாமைத்துவ அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் 31 ஆம் பிரிவுக்கமைய முதனிலை வியாபாரிகளை நியமித்தல் மற்றும் அவர்களுக்கு ஏற்புடைய விடயங்கள் பற்றிய ஒழுங்குவிதிகளை வெளியிடுதல் பற்றிய அதிகாரம் நிதி விடயதான அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரச பிணையங்களை வெளியிடும் போது முதனிலை வியாபாரிகள், வேறு வியாபாரிகள் மற்றும் விலை கூறுபவர்களாகவுள்ள வியாபாரிகள் அல்லாதோருடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல் செய்தல், முதனிலை வியாபாரிகளின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்வதற்காக பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தை வலுவூட்டல் மற்றும் அரச பிணையங்களை வெளியிடல் தொடர்பாக முதனிலை வியாபாரிகளுக்கான வழிகாட்டல், தொழிற்பாட்டு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்திற்கு அதிகாரத்தை ஒப்படைக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவ ஒழுங்குவிதிகள், 2459/52 ஆம் இலக்க 2025.10.24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. (129 ஆவது அத்தியாயமான) கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இலக்க 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தங்ககங்கள் மற்றும் விருந்தகங்களில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் பணியாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிககொடையை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய நிறுவகச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தரநிர்ணயங்களைத் தயாரிப்பதற்காக தேசிய கொள்கையொன்றை உருவாக்;கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய நிறுவகச் சட்டத்தின் மூலம் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகம் தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவகத்தின் பணிப்பொறுப்புக்களை விரிவாக்கம் செய்வதற்கும் சமகால வேலை உலகத்திற்குப் பொருத்தமான வகையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு இச்சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் பற்றிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சட்டவரைஞர் அறிவித்துள்ளார். அத்துடன், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தால் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத துறைகளிலுள்ள ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரச துறையின் ஒழுங்குமுறைப்படுத்தலுடன் கூடிய பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கும், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களை தரநியமப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் குறித்த சட்டமூலத்திற்கு மேலும் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்திருத்தங்களை உட்சேர்த்து தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான இறுதி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

12. பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் (நீக்குதல்) சட்டமூலத்தைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பித்தல்
தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றுகின்ற இலங்கை பொறியியல் சேவையின் விசேடதர சிவில் 03 ஆம் வகுதியின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி (பொறியியலாளர்) கே. வெலிகேபொலகேவை 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading