Local

பட்ஜட் தினத்தன்று காலையில் அரசமைப்புப் பேரவையும் கூடும்! – வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

புதிய அரசமைப்புக்கான நகல் வடிவ அறிக்கையை புதிய அரசமைப்பு நகலாக ஏற்று விவாதம் நடத்துவதா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அரசமைப்புப் பேரவையின் கூட்டம் (constitutional assembly) நவம்பர் 7 ஆம் திகதி பட்ஜட் தினத்தன்று காலையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்.

நேற்று இடம்பெற்ற புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. நகல் வடிவ அறிக்கையை இறுதி செய்து அதனை நகல் வரைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி அரசமைப்புப் பேரவைக்கு முன்வைப்பது தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் ஆராய்வது என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

நகல் வடிவ அறிக்கையின் சிங்கள, ஆங்கிலப் பிரதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. இதன் தமிழ் வடிவமும் கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்த நகல் வடிவ அறிக்கையின் தமிழ் வடிவம் தொடர்பில் புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் உறுப்பினரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்றைய கூட்டத்தில் சர்ச்சை ஒன்றைக் கிளப்பினார்.

அறிக்கையின் தமிழ் வடிவத்தில் ’ஏக்கிய ராச்சிய’ என்ற சிங்களச் சொல்லுக்கு ’ஒருமித்த நாடு’ என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ’ஏக்கிய ராச்சிய’ என்றால் ஒற்றையாட்சி என்றே அர்த்தம். இவ்வாறு இருந்தால் எப்படி ஏற்றுகொள்வது என்று டக்ளஸ் தேவானந்தா நேற்றைய கூட்டத்தில் கருத்தை முன்வைத்தார்.

இதனைச் சாதகமாக்கிய மஹிந்த தரப்பின் உறுப்பினரான தினேஸ் குணவர்த்தன, “டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்து தொடர்பில் ஆராய்வதற்குக் கால அவகாசம் தேவை” என்றார்.

இதனையடுத்து வழிகாட்டல் குழுவை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் கூட்டுவது எனவும், அதன் பின்னர் அரசமைப்புப் பேரவையை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பட்ஜெட் தினத்தன்று காலையில் கூட்டி புதிய அரசமைப்புக்கான நகல் அறிக்கையை நகலாக ஏற்று விவாதம் நடத்தலாமா என்பது குறித்து தீர்மானிப்பது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading