Local

பதில் பிரதமராக பசில் ராஜபக்‌ச?

19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் பதில் பிரதமராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்படலாம்?
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளையில், பதில் பிரதமர் பதவி ஒன்று புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்டு அது அவருக்கு வழங்கப்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என மொட்டுக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிடமுடியாது. இதனால் எம்.பி. பதவியை வகித்த கீதா குமாசிங்கவுக்கு கடந்தமுறை பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் போட்டியிடலாம் என்ற வகையில் அரசமைப்பு மாற்றியமைக்கப்படவுள்ளது.

சுமார் மூன்று மாதங்களில் இதற்கான பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னரே பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இருந்த போதிலும் பதில் பிரதமர் என்ற பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அந்தப் பதவிக்கு பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்படலாம் எனவும் கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading