பழகிப்போன அடிமைத்தனமும் வரலாற்றின் மௌனமும்
வரலாறு என்பது வெறும் காலவரிசை அல்ல; அது அதிகாரத்திற்கும் எளிய மக்களுக்குமான உறவைச் சொல்லும் கண்ணாடி. ஒரு காலத்தில் மன்னர்கள் மக்களைக் காப்பவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அந்த அதிகாரம் மக்களை ஒடுக்கும் கருவியாகவே இருந்துள்ளது என்பதை அறிந்தோம்.
அது வரலாறு நெடுகிலும் மக்களை ஒடுக்கியபடியே உள்ளது; இன்றைய தகவல்களின் யுகத்தில் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அது மக்களை சிந்திக்கவிடாமல் மழுங்கடிக்கிறது என்பது புலப்படும். தகவல் தொழில்நுட்ப, மின்னனு உலகம் இதை கச்சிதமாகச் சாத்தியப்படுத்திக் கொடுத்து விட்டது.
ஷூ பாலிஷ் போடுகிற பிரதமர்களையும் மன்னர்களையும் பார்த்து பார்த்துப் பழகியவர்கள், “ஏன், நீங்களும் பாலிஷ் போட வேண்டியது தானே?” என்கிறார்கள். வரலாற்றில் மக்கள் எப்படி பழக்கப்பட்டு விடுகிறார்கள் பாருங்கள்.
“நியாயம்” என்ற ஒன்றைப் பற்றி பேச அஞ்சுகிறார்கள்; வரலாற்றைப் புரட்டி பார்க்க பயப்படுகிறார்கள். இந்த மனநிலை ஒரு ஆபத்தான வரலாற்றுச் சுழற்சியைக் காட்டுகிறது. ஆட்சியாளர்களின் செயல்களை பிம்பக் கட்டுமானங்களாகப் பார்த்து, வாட்சப் பல்கலைக்கழகங்களின் துணையுடன் முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாகப் படித்தவர்கள் கூட மாறி நிற்கிறார்கள்.
சர்வாதிகாரிகள் எப்போதும் தங்களை தேசத்தின் மீட்பவர்களாகவே சித்தரித்துள்ளனர். அவர்கள் உருவாக்குவது வெறும் அரசியல் அமைப்பு அல்ல; ஒரு பயப்பிதற்றல் கலாச்சாரம். அந்த கலாச்சாரத்தில் கேள்வி கேட்பது துரோகமாகக் கருதப்படுகிறது. ஒப்புதல் மட்டுமே நாட்டுப்பற்று எனப் பெயரிடப்படுகிறது.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதிகாரம் எவ்வாறு மனிதர்களை மனதளவில் அடிமைகளாக மாற்றியது என்பதை தெளிவாக காணலாம். அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்பு கருப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டு, மனித உரிமைகளற்ற பொருள்களாக நடத்தப்பட்டனர். அவர்கள் உழைத்தனர்; ஆனால் அவர்களுக்குச் சொந்தமாக எதுவும் இல்லை. அந்த அடிமைத்தனம் வெறும் சங்கிலிகளில் மட்டும் இல்லை — அது சட்டங்களில், பொருளாதாரத்தில், சமூக மனநிலையிலும் பதிந்திருந்தது.
அடிமைத்தனம் சட்டரீதியாக ஒழிக்கப்பட்ட பின்னரும், மன அடிமைத்தனம் நீண்ட காலம் தொடர்ந்தது. மனிதர்கள் தங்களைத் தாழ்வாகவே எண்ணும்படி சமூக அமைப்பு வடிவமைக்கப்பட்டது. இதுவே அதிகாரத்தின் மிக ஆபத்தான வடிவம் — உடலை விட மனதை கட்டுப்படுத்துவது.
மக்கள் ஏன் இவ்வாறு பழக்கப்பட்டுப் போகிறார்கள்? ஏனென்றால் அதிகாரம் எப்போதும் ஒரு விதமான “மயக்க மருந்தை” மக்களின் மேல் தெளித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மயக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கேள்வி கேட்க அஞ்சுகிறார்கள். “நியாயம்” என்ற ஒற்றைச் சொல்லை உச்சரிக்கக் கூட அவர்களுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் “நியாயம்” என்பது அதிகாரத்தின் அடிப்படையை அசைத்து பார்க்கும் வல்லமை கொண்டது.
வரலாறு கற்றுத்தரும் பாடம் ஒன்றுதான்: பிம்பங்களை ஆராதிப்பவர்கள் என்றுமே விடுதலையைச் சுவைக்க முடியாது. சர்வாதிகாரிகளின் சிலைகள் உயரமாக இருக்கலாம்; ஆனால் அவை சாயும் நாளும் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டாயிருக்கும்.
இன்றைக்கு நாம் மௌனமாக இருக்க முடிவு செய்தால், அநீதியைக் கண்டு அஞ்சினால், அது நாம் நம்முடைய எதிர்காலச் சந்ததிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
“அனைவரும் அடங்கி வாழ்கிறார்கள்; நீங்கள் மட்டும் ஏன்?” என்ற கேள்வி எப்போதும் அதிகாரத்திற்கு வசதியானது. ஆனால் “உங்களைப் போல எங்களால் மண்டியிட முடியாது” என்று சொல்லும் தைரியம் தான் வரலாற்றை மாற்றிய பல புரட்சிகளின் தொடக்கம்.
வரலாறு அமைதியாக இருப்பதில்லை. அது மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒரு நாளில் தீர்ப்பளிக்கும்.
இன்றைய ஈராணின் செயல்களை பார்த்து முதலில் பலர் சிரித்தார்கள், இவர்களால் எல்லாம் போட்டி போட முடியாது என்றார்கள். இன்றைக்கும் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள், நாங்கள் மடிந்தாலும் எங்கள் நிலத்தின் உரிமைக்காக போராடியபடி மடிவோம், வரலாறு எங்களை நிச்சயம் போற்றும் என்கிற ஒரு பெரியவரின் குரல் என்னை உறங்க விடாமல் செய்தது.
வரலாற்றில் நாங்கள் மண்டியிட்டு வீழ்ந்தோம் என்கிற ஒற்றை வரி இடம் பெறக் கூடாது என்பதும் கூட எத்தனை பெரிய வைராக்கியம்…

You must be logged in to post a comment.