Local

பிள்ளையான், சுரேஷ் சலே இரகசிய தொடர்பு! அம்பலப்படுத்திய கருணா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளது.

இந்த விசாரணையின் போது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளையான் தரப்பினருக்கும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேக்கும் இடையில் காணப்பட்ட நெருங்கிய தொடர்பு மற்றும் அவர்கள் கூட்டாக மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

​குறிப்பாக, பிள்ளையானின் குழுவினருக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக சுரேஷ் சலே நபர்களைத் தொடர்புபடுத்திக் கொடுத்தார் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளைக் கூட அவர்களே வழங்கியுள்ளனர் என்றும் கருணா அம்மான் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகிய இருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த ஒரே அரசியல் நீரோட்டத்தில் இருந்தபோதிலும், அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகால அரசியல் பகைமை நிலவி வந்தமை அரசியல் அரங்கில் அனைவரும் அறிந்ததேயாகும்.

​இதேவேளை, பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் ஒன்று குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகருக்குள் அவர்களின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவளித்த நபர்கள் யார் என்பது குறித்தும் சிஐடியினரால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading