Local

மறைந்த புத்தளம் நகர பிதா பாயிஸின் மரண அறிக்கை வெளியானது!

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரதியமைச்சரும் புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 52.

புத்தளத்தை அண்மித்த வண்ணாத்துவில்லு பிரதேசத்திலுள்ள தனது தோட்டத்துக்கு நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கச் சென்ற அவர், இறால் மடு குளத்தில் குளித்துவிட்டு திரும்பும்போது, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து எலுவன்குளம் பிரதான வீதிக்குள் பிரவேசிக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

திறந்த கெப் வண்டியின் பின்புறமாக அமர்ந்து பயணித்த அவர், வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்டதாகவும் அதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்ற சமயம் நகர பிதா கே.ஏ. பாயிஸுடன் பயணித்த அவரது சாரதி உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த கே.ஏ.பாயிஸ் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் மரணித்து விட்டதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புத்தளம் மற்றும் வண்ணாத்தவில்லு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் PCR மற்றும் பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, நகர பிதா பாயிஸுடன் குறித்த கெப் வண்டியில் பயணித்திருந்த சாரதி உள்ளிட்ட மூவரை வண்ணாத்துவில்லு பொலிஸார் இன்று (24) அதிகாலை கைது செய்தனர்.

புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஜி.எஸ். ஜயமஹ ஆகியோரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய, கைது செய்யப்பட்ட மூவரிடமும் வண்ணாத்துவில்லு பொலிஸாரும் புத்தளம் பொலிஸாரும் விசேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடமும் புத்தளம் பொலிஸ் விசேட தடயவியல் பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், புத்தளம் நகர சபைக்கு சொந்தமான விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்களையும் பொலிஸார் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் மதுபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அனைத்து சாட்சியங்களையும் பகுப்பாய்வு செய்த பொலிஸார், பிரேத பரிசோதனை அறிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தனர்.

இதன்போது, புத்தளம் நகர பிதா பாயிஸ் கெப் வாகனத்தில் இருந்து விழுந்தமையால், தலையில் பலத்த காயத்துக்கு உள்ளானமையும் அதுவே மரணத்தை ஏற்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தி ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பில் கெப் சாரதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். ஏனைய இருவரும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பிசிஆர் பரிசோதனையில் கொவிட் -19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு நகர பிதா பாயிஸின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பாயிஸின் இல்லத்துக்கு விஜயம் செய்தனர்.

இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்ணான்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கே.ஏ.பாயிஸின் வீட்டுக்கு விஜயம் செய்து ஜனாஸாவை பார்வையிட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading