மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகியர்களும்!

இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம்.
மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது.
இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர்.
இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese
historian Fernao De Queyroz) இலங்கை முஸ்லிம்கள் “முரிட்டானியாவைச் சேர்ந்தவர்கள்” என்பதால் ‘மௌரோஸ்’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார். இறுதியில் ‘மௌரோஸ்’ பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ‘மூர்ஸ்’ ஆனது.
இலங்கையின் முதல் பிரதம நீதியரசர்
சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டனும் (Sri Alexander Johnston) இலங்கை சோனகர்கள் முரிட்டானியாவைச் (Mauretania) சேர்ந்த அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதாகக் கூறுகின்றார். வேறு சில வரலாற்றாசிரியர்களின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது.
வட ஆப்பிரிக்காவின் அல்ஜீரியா, மாரிட்டானியா,லிபியா மற்றும் மொராக்கோ பகுதிகளை உள்ளடக்கிய மக்ரெப் பிராந்தியத்தில் இருந்த வணிக குழுவினருக்கும் மத்திய தரைக்கடல் மற்றும் அரபு வணிகர்களுக்குமான வியாபாரத்தொடர்புகளை பற்றிய கிபி 11ம் நூற்றாண்டின் அரபு புவியியலாளரான அல் பக்ரியின் பதிவுகள், அதேபோல கிபி 8ம் நூற்றாண்டில் சோனிங்கே மக்களின் வணிகத்தொடர்புகள் குறித்து அரபு புவியியலாளர் முஹம்மது இப்னு இப்ராஹிம் அல் ஃபஸாரி என்பவரின் பதிவுகள் இவர்களின் வணிக நோக்கத்திற்கான மரக்கலத்திலான இலங்கை நோக்கிய பயணம், திமிலரிடமிருந்து முக்குவர்களை பாதுகாப்பதில் பட்டாணியர், துலுக்கர் அல்லது சோனகர் என தமிழர்களாலும் மரக்கல மினிசு என சிங்களவர்களாலும் அறியப்பட்ட இவர்களின் தமிழ் பெண்களின் திருமண பந்தத்தால் உருவான இலங்கை சோனக முஸ்லீம்கள் ( Ceylon Moors) பற்றிய விரிவான ஆராய்ச்சி என்பன நமக்கும் மொரோக்கோவிற்குமான தொடர்பை விரிவாக எடுத்தியம்புகிறது.
எனவே இலங்கை முஸ்லீம்களை குறிக்கும் சொற்களான மூர், சோனகர் அல்லது மரக்கல மினிசு என்கிற சொற்களின் அடிப்படை நம்முள் ஆப்பிரிக்க வணிகர்களின் குறிப்பாக மரிட்டானிய மற்றும் மொரோக்கோ இனக்கலப்பினை காட்டுவதாக உள்ளது.
இதனால் நாமும் மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாம். ?.
-நன்றி கியாஸ் சம்சுடீன் –
