World

விமானத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த பெண்ணால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் !

காதலன் புறக்கணித்ததால் நடுவானில் பறந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை சீன பெண்ணால், அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவின் உள்நாட்டு விமானமான லூங் ஏர்லைன்ஸ் விமானத்தில் 29 வயதுடைய லி என்ற பெண் பயணம் செய்தார். போதையில் இருந்த அந்த ெபண், 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்தார். அதனை கண்ட விமான பணியாளர்கள், அதிர்ச்சியடைந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து அவசர அவசரமாக மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தின் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. திட்டமிடப்படாத தரையிறக்கத்தால் திடீர் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் சைனிங்கிலிருந்து கிழக்கு சீனாவின் கடலோர நகரமான யான்செங்கிற்கு பயணிக்க இருந்தது. இதுகுறித்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘அந்த பெண் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு மது அருந்தியுள்ளார். அவர் தனது  கட்டுப்பாட்டை இழந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்.

அந்த பெண்ணின் காதலன், அவரை புறக்கணித்ததால் மனமுடைந்த நிலையில், இந்த செயலை செய்துள்ளார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ‘பைஜியு’ என்று அழைக்கப்படும் சீன மதுவை குடித்ததாக அந்த பெண் தெரிவித்தார். இந்த மதுபானத்தில் ஆல்கஹாலின் அளவு 35 முதல் 60 சதவீதம் வரை இருந்தது. அதிர்ஷ்டவசமாக, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சம்பவம் நடந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றனர்.

மேற்கண்ட சம்பவம் நடந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில், தற்போது ‘வெய்போ’ போன்ற சீன சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், அந்த பெண் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு அழுகிறார். திடீரென கண்ணாடி ஜன்னலை மீண்டும் மீண்டும் தாக்கி உடைக்கிறார்.  பதற்றமடைந்த மற்ற பயணிகள் அந்த பெண்ணை தடுத்து அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர். போதையில் சீன பெண் மன அழுத்தத்தில் செய்த காரியத்தால், விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading