World

விமான கழிவறையில் பூட்டிய பயணியால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஆஸ்திரியா வழியாக சைப்ரஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, கழிவறையை பயன்படுத்திய பயணியால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை சைப்ரஸ் நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் குறித்த விமானமானது ஆஸ்திரியாவின் Graz விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் பயணித்த 51 வயதான ரஷ்ய பயணி, கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதே காரணமாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்டதில் இருந்தே அவர் கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதாகவும், இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தை Graz விமான நிலையத்தில் தரையிறக்கியதாகவும் விமானி தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, விமானியின் கோரிக்கையை ஏற்று, ஆஸ்திரியா பொலிசார் குறித்த பயணியை காவல் நிலையம் அழைத்து சென்று பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், விமானத்தின் கழிவறை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தினர்.

ஆனால் அச்சப்படும் வகையில் ஏதும் கண்டறியப்படவில்லை எனவும், பொலிஸ் விசாரணைக்கு அந்த ரஷ்யர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் கழிவறைக்கு சென்று பூட்டிக்கொண்டதன் காரணத்தை அந்த நபர் வெளியிடவே இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதுடன், அந்த நபரை ரயிலில் அனுப்பி வைத்துள்ளதாக ஆஸ்திரியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading