Local

வேகமாக பரவும் டெல்டா வைரஸால் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு!

உலக நாடுகளில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் உயிரழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இரண்டு ஆண்டுகளாக இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் நாளுக்குநாள் உருமாறிக் கொண்டே சென்று மக்களையும் மருத்துவ நிபுணர்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

பல்வேறு வகையான கொரோனா வைரஸ் உருமாறிய வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறிய கொரோனா வைரசை இந்தியாவில் கண்டறிந்தனர்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் உலக நாடுகளில் மிக வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இங்கிலாந்தில் இந்த டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை தெரிவித்திருத்ததோடு, இரண்டு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், முதல் தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு அதிகமாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தோனேசியா நாடு தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரே நாளில் 29 ஆயிரத்து 745 பேர் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 588 ஆக அதிகரித்துள்ளது என்பதால் அந்நாட்டு அரசு மிகவும் கவலை தெரிவித்திருக்கிறது.

இந்தோனேசியாவில் ஜாவா, பாலி தீவுகளில் டெல்டா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் தேதி வரைக்கும் மருத்துவமனைகளில் 75 சதவிகித படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஜாவா தீவில் மட்டும் 90 சதவிகித படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று இந்தோனேசியா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், சவப்பெட்டிகளுக்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதால் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு சாதாரணமாக தயாரிக்கும் அளவை விட 3 மடங்கு அதிகமான பெட்டிகளை தயாரிப்பதாகவும் மக்கள் இவ்வாறு உயிரிழந்து வருவது வேதனை அளிப்பதாகவும், சோர்வடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading