World

2 முறை ஊசி செலுத்தியும் உயிருடன் வந்த மரண தண்டனை கைதி..!!

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில், 2 முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிருடன் இருந்த கிறிஸ்டா பைக் (50) என்ற பெண் மரண தண்டனைக் கைதி, தீவிர சிகிச்சைக்காக சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, டென்னசி மாநில ஆளுநர் பில் லீ இந்த ஆண்டு (2026) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 30, 2026 (புதன்கிழமை) இரவு, நாஷ்வில் நகரில் உள்ள சிறையில் கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற நச்சு இரசாயனம் அடங்கிய ஊசி செலுத்தப்பட்டது.

வழக்கமாக முதல் ஊசியிலேயே உயிர் பிரிந்துவிடும் நிலையில், கிறிஸ்டா பைக்கின் உயிர் பிரியவில்லை. இதனால், சிறை விதிமுறைப்படி இரண்டாவது டோஸ் ஊசியும் செலுத்தப்பட்டது.

இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்ட பின்னரும், அவர் சுயநினைவின்றி தொடர்ந்து மூச்சுவிட்டுக் கொண்டும், குறட்டை ஒலி எழுப்பிக்கொண்டும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது வழக்கறிஞர்கள், “கைதி கடுமையான வேதனையை அனுபவிக்கிறார்” எனக் கூறி உடனடியாக தண்டனையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தண்டனை நிறைவேற்றம் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு (தனது 18 ஆவது வயதில்) காதலனுடன் இணைந்து, கொலீன் ஸ்லெம்மர் (19) என்ற சக மாணவியைக் கொடூரமாகத் சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

டென்னசி மாநிலத்தில் மரண தண்டனைப் பட்டியலில் இருந்த ஒரே பெண் கைதி இவராவார். கடந்த 200 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் பெண்ணொருவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

“மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது உண்மையில் என்ன தவறு நடந்தது?” என்பது குறித்து விரிவான சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள டென்னசி மாநில ஆளுநர் பில் லீ, இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கு அனைத்து மரண தண்டனைகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading