‘JEWELS 2026’ நிகழ்வில் பங்கேற்க இலங்கை இரத்தினம் மற்றும் ஆபரணத் துறைக்கு GASL அழைப்பு
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 4 முதல் 6 வரை கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) நடைபெறவுள்ள ‘JEWELS 2026’ சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரணக் கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வின் மூலம், இலங்கை இரத்தினம் மற்றும் ஆபரணத் துறை உலகளாவிய அரங்கில் தனது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இலங்கை இரத்தினவியல் நிபுணர்கள் சங்கத்தால் (GASL) “இலங்கையிலிருந்து உலகிற்கு” (From Sri Lanka to the World) என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, இரத்தின வியாபாரிகள், ஆபரணத் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், இரத்தினவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வணிக நிறுவனங்கள் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கவுள்ளது.
2002 ஆம் ஆண்டில் கனிமக் கண்காட்சியாகத் தொடங்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டில் ‘JEWELS’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்நிகழ்வு, தற்போது வர்த்தகம், கல்வி, கைவினைத்திறன், போட்டி மற்றும் துறைசார் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகப் பரிணமித்துள்ளது.
இலங்கை இரத்தினவியல் நிபுணர்கள் சங்கத்தின் (GASL) தலைவரான திருமதி சதுராங்கனி அர்த்தநாயக்க, “இலங்கை இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ‘JEWELS 2026’ கண்காட்சியானது, அந்தப் பாரம்பரியத்தை இத்துறையின் தற்போதைய திறமை மற்றும் புத்தாக்கத்துடன் ஒன்றிணைக்கிறது,” என்று வலியுறுத்தினார். அதேவேளையில், GASL-இன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ‘JEWELS 2026’-இன் தலைவருமான திரு. ஷெஹான் தௌலகல, “வணிக நிறுவனங்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்தவும், புதிய சந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், அர்த்தமுள்ள தொழில்சார் உறவுகளை உருவாக்கவும் ‘JEWELS 2026’ ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று குறிப்பிட்டார்.
வர்த்தக நடவடிக்கைகளுடன் கல்வி மற்றும் தொழில்சார் சிறப்பையும் இணைக்கும் வகையில் ‘JEWELS 2026’ நிகழ்வில் ‘JEWELS’ போட்டி இடம்பெறவுள்ளது. வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும், இத்துறையில் அங்கீகாரம் பெறவும் மற்றும் சர்வதேச அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையவும் வாய்ப்புகள் உள்ளதால், இத்துறையைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே தங்கள் கண்காட்சி அரங்குகளை முன்பதிவு செய்து, ‘JEWELS 2026’-இல் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு GASL ஊக்குவிக்கிறது.
கண்காட்சியாளர் பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு: www.jewelssrilanka.lk அல்லது WhatsApp: 076 699 3022

You must be logged in to post a comment.