டுபாய் பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!
டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரும், கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் இரத்த மாதிரியை பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென டுபாய் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இராஜாங்க மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக குழுவொன்றினை டுபாய்க்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள குழுத் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர் போதைப்பொருளுடன் கடந்த 5 ஆம் திகதி டுபாயிலுள்ள ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷுடன் இருந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்குரிய நபர் யாரெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டுக்குரியவர், கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரெனவும் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவருடன் கைதான சிறைச்சாலைப் பாதுகாவலரும், கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் லங்கா தீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளான நிலையில், அங்கவீனமுற்றிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்
