Local

50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் கணக்கு விவரங்கள் ஆன்லைனில் கசிந்த அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் 50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் கணக்கு விவரங்கள் ஆன்லைனில் கசிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் என்பவர், பேஸ்புக் பயனாளர்கள் 50 கோடி பேரின் தகவல்கள் ஹேக்கர்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தகவல்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் கிடைப்பதாக கூறியிருக்கும் அவர் அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் 61 லட்சம் பேரின் கணக்கு விவரங்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் பயனாளர்களின் முழு பெயர் அவர்களின் மொபைல் எண், இமெயில் முகவரி, திருமணம் ஆனவரா இல்லையா என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த தகவல்களை ஆலனும், பிசினஸ் இன்சைடர் நிறுவனமும் இணைந்து பரிசோதித்ததில் அவை உண்மையான தகவல் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் வழக்கம் போல் மறுத்துள்ளது. ‘தற்போது வெளியாயிருக்கும் தகவல்கள் பழையவை. இவை, 2019ம் ஆண்டிலேயே கசிந்ததாக கூறப்பட்டு, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது,’ என அது கூறியுள்ளது. 50 கோடி பேரின் தகவல்கள் ஆன்லைனில் உலாவுவது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், தனிநபர் தகவலுக்கு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

* இமெயில், போன் நம்பரை வைச்சு என்ன செய்யலாம்?
இமெயில் ஐடி, போன் நம்பர் வைச்சு என்ன செய்வாங்கன்னு நினைக்காதீங்க. இதுபோன்ற தகவல்களை, ஹேக்கர்கள் விளம்பர நோக்கத்திற்காக பல்வேறு நிறுவனங்களிடம் விற்கலாம். அதற்கு பயனாளர்கள் பெயர், போன் நம்பர், வயது போன்ற தகவல்களை தந்தாலே பணம் தருவார்கள். அது மட்டுமின்றி மோசமான ஹேக்கர்களாக இருந்தால், ஒரே நேரத்தில் இமெயில் ஐடி, போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வங்கியிலிருந்து தொடர்பு கொள்வதாக நம்ப வைத்து, உங்கள் வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்களை பெற்று பணத்தை அபேஸ் செய்யவும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading